திருப்பூர்:திருப்பூரின் முன்னணி பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், உற்பத்தி செய்த துணியின் தரத்தை, உறுதிப்படுத்தி, சான்றிதழ் பெறும் வகையில், 'யுரோபின்ஸ் - எம்.டி.எஸ்.,' என்ற நிறுவனத்திடம் பரிசோதனை செய்கின்றன. அந்நிறுவனம் வழங்கும் தரச்சான்றிதழை, வெளிநாட்டு வர்த்தகர்கள் நம்பிக்கையுடன் ஏற்கின்றனர். பின்னலாடை துணி மட்டுமல்லாது, குடை, பொம்மைகள் என, அனைத்து வகையான பொருட்களின் உற்பத்தி தரம் குறித்து, இந்நிறுவனம் ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்குகிறது. அதற்காக, திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகரில், 'சாப்ட்லைன்ஸ்' என்ற ஆய்வகம் இயங்கி வருகிறது.இதுவரை இல்லாத வகையில், காலணி மற்றும் தோல் பொருளுக்கான ஆய்வக வசதி, 'சாப்ட்லைன்ஸ்' நிறுவனத்தில், துவக்கப்பட்டுள்ளது. இதனை, யுரோபைன்ஸ் - எம்.டி.எஸ்., நிறுவனத்தின், முதன்மை செயல் அலுவலர் ஸ்டீபன் பரவு திறந்து வைத்தார். மண்டல நிர்வாக இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில், ''பிராந்தியம் முழுவதும் உள்ள, எங்களது வாடிக்கையாளருக்கு, தரமான சோதனையை வழங்கும் நோக்கத்துடன், ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. தரமான தயாரிப்புகளை உற்பத்தி செய்யவும், கடைநிலை நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவியாக இருக்கும்,'' என்றார். ---'யுரோபின்ஸ் - எம்.டி.எஸ்.,' நிறுவனத்தின், தோல் பொருட்களுக்கான ஆய்வக பிரிவு துவக்க விழாவில், பங்கேற்றோர்.