உடுமலை;அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீர் வரத்து அதிகரித்துள்ளது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.கடந்தாண்டு வட கிழக்கு பருவ மழையும், நடப்பாண்டு, குளிர் கால மற்றும் கோடை கால மழையும் குறைந்ததால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது.அணையிலிருந்து, ஆண்டு தோறும் ஜூன் மாதம் பழைய ஆயக்கட்டு, ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கும், தொடர்ந்து வலது கரை கால்வாய்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும் நீர் வழங்கப்படும்.அணை நீர்மட்டம் குறைவாக உள்ளதால், பாசனத்திற்கு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.நேற்று காலை நிலவரப்படி, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 47.21 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 1,041.34 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 685 கனஅடி நீர்வரத்து காணப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை துவங்கினாலும், இன்னும் தீவிரமடையாமல் உள்ளது. தற்போது துவங்கியுள்ள பருவ மழையால், அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது,' என்றனர்.