உடுமலை;உடுமலை பகுதிகளில், வெப்பநிலை உயர்ந்து, கடந்த சில நாட்களாக, 98 முதல், 102 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.மே மாதம் பிறக்க, அக்னி நட்சத்திர வெயிலுக்கு இன்னமும் ஒரு மாதம் உள்ள நிலையில், தற்போதே வெயில் அதிகரித்துள்ளது.உடுமலை பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், பயிர்களுக்கு நீர் கிடைக்காமல், குளம், குட்டைகள் வறண்டு, கடுமையான வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.கடந்த, டிச., மாதத்திற்கு பின், உடுமலை பகுதிகளில் மழையில்லாமல், கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. வெப்பத்தை தணிக்க ஒரு மழையாவது பெய்யுமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. அனல் காற்றால் ஜூஸ், குளிர்பானம், இளநீர், கரும்புச்சாறு, கம்மங்கூழ், மோர், தர்பூசணி விற்பனை சூடுபறக்கிறது.ஜூஸ், தர்பூசணி கடைகள் முன் காத்திருந்து, வாடிக்கையாளர்கள் வாங்கி சுவைக்கின்றனர். வெயிலால் கடந்த சில நாட்களில் விற்பனை அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க உள்ள நிலையில், வெயில் தாக்கத்தால் வேட்பாளர்களும், கட்சியினரும் கவலையடைந்துள்ளனர்.வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு சென்றாலும், வெயில் காரணமாக மக்கள் தலைகாட்ட மாட்டார்கள். எனவே, காலையிலும், மாலையிலும் பிரசார நேரத்தைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்று வேட்பாளர்கள் கூறுகின்றனர்.தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில், வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால், அரசியல் கட்சியினரும் பாதித்துள்ளனர்.