திருப்பூர் : உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படும் 'பேட்டரி' வாகனங்கள் பழுது சரி செய்வதில், தெளிவான நடைமுறை இல்லாததால், உள்ளாட்சி நிர்வாகங்கள் குழப்பத்தில் உள்ளன.மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில், துாய்மைப் பணிக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்படுகின்றன. குப்பையை சேகரித்து வர இவை பயன்படுகின்றன. வாகனத்தில் பழுது ஏற்படும் போது அதை செய்வதற்கோ, புதிய உதிரி பாகங்களை பொருத்துவதற்கோ சரியான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை.பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகத்தினர், உள்ளூரில் உள்ள ஒர்க்ஷாப்பில் பழுது நீக்கம் செய்து கொள்கின்றனர். அரசால் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தினர் சார்பில் வழங்கப்படும் பேட்டரி வாகனங்களுக்கு கியாரண்டி, வாரண்டி இருந்தும், அந்நிறுவனத்தினர் சர்வீஸ் செய்து கொடுப்பதில்லை என்ற புகார் இருந்து வருகிறது.தி.பூண்டியில் விவகாரம்
திருமுருகன்பூண்டி நகராட்சியில், வார்டு தோறும் குப்பை சேகரிக்கும் பணிக்கென, 8 'பேட்டரி' வாகனங்கள் வாங்கப்பட்டு, இயக்கப்பட்டு வந்தன. இதில், 5 'பேட்டரி' வாகனங்கள் பழுதாகி, கடந்த பல மாதங்களாக ஓரங்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், குப்பை சேகரிக்கும் பணியில் தொய்வு தென்படுகிறது.'பேட்டரி வாகனங்களை பழுது நீக்கம் செய்யும் பணியை தனியார் நிறுவனத்தினர் மேற்கொள்ளவே இல்லை' என நகராட்சி நிர்வாகத்தினர் கூறும் நிலையில், குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.---திருமுருகன்பூண்டி நகராட்சியில் பழுதான பேட்டரி வாகனங்கள் ஓரம்கட்டி நிறுத்தப்பட்டுள்ளன.
பழுது சரிசெய்ய யாரும் இல்லை
நகராட்சி தலைவர் குற்றச்சாட்டுதிருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார் கூறுகையில்,''பேட்டரி வாகனங்கள் பழுதாகி நிற்பதால் அவற்றை பயன்படுத்த முடியவில்லை. அவற்றை வினியோகித்த நிறுவனத்தினரிடம் புகார் கூறினாலும், அவர்கள் வாகனத்தை 'சர்வீஸ்' செய்ய முன்வருவதில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், உரிய விளக்கம் தருவதில்லை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் அந்நிறுவனம் சார்பில் ஊழியர் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது; அங்கு சென்று பார்த்த போது, அத்தகைய ஊழியர்கள் யாரும் இல்லை,'' என்றார்.பேட்டரி பழுது ஏற்பட காரணம்கையாளத் தெரியாத ஊழியர்கள்பேட்டரி வாகனங்களை வினியோகித்த 'ராயல் அண்ணன்மார்' நிறுவன மேலாளர் ராம்குமார் கூறுகையில்,'கடந்த, 10 நாளுக்கு முன்பு கூட, நகராட்சியில் பேட்டரி வாகனங்களை பழுதுநீக்கி கொடுத்தோம். தொடர்ந்து பராமரிப்புப்பணி செய்து வருகிறோம். பேட்டரி வாகனங்களை எப்படி பழுது ஏற்படாமல் இயக்குவது என்பது குறித்து பயிற்சியும் வழங்கியுள்ளோம். பேட்டரி பழுது ஏற்பட, அதை சரியாக கையாள தெரியாத பணியாளர்கள் தான் காரணம்,'' என்றார்.