| ADDED : ஏப் 25, 2024 11:33 PM
உடுமலை;அனுமதி இல்லாமல், வனத்தில் மரங்களை வெட்டியதாகவும், பாறைகளை உடைத்து விலங்குகளை அச்சுறுத்தியதாக மலைவாழ் கிராமத்தைச்சேர்ந்த நபரை உடுமலை வனத்துறையினர் கைது செய்தனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்துக்குட்பட்டது குருமலை மலைவாழ் கிராமம். இக்கிராமத்துக்குச்செல்லும் வழியில், மரங்கள் வெட்டப்படுவதாக வனத்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் அடிப்படையில், இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஒரு நபரை கைது செய்துள்ளனர்.இது குறித்து, வனத்துறையினர் கூறியதாவது:குருமலை செல்லும் வழித்தடத்தில், எவ்வித அனுமதியும் இல்லாமல், மரங்களை வெட்டியும், பெரிய அளவிலான பாறைகளை உடைத்தும், வனவிலங்குகளை அச்சுறுத்தியதால், வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில், திருமூர்த்திமலை சாம்பல்மேடு பகுதியைச்சேர்ந்த நாகராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அதே பகுதியைச்சேர்ந்த மூர்த்தி என்ற நபரை தேடி வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.