| ADDED : மார் 29, 2024 10:31 PM
உடுமலை;உடுமலை நகர ரோடுகளில், அடையாளம் இல்லாத பாதாளச்சாக்கடை ஆள் இறங்கு குழிகளால், விபத்துகள் அதிகரிக்கின்றன.உடுமலை நகரில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், குடியிருப்புகள், வணிக கடைகளின் சாக்கடை கால்வாய்களை இணைக்கும் ஆள் இறங்கும் குழிகள், நுாற்றுக்கும் மேல் உள்ளன.இக்குழிகள் அவ்வப்போது சிதிலமடைவதும், முறையாக பராமரிக்கப்படாமல் விடுவதால் குழிகளின் மூடிகள் உடைந்தும், பல இடங்களில் விபத்து பகுதிகளாகவே மாறிவிட்டன.தற்போது இக்குழிகள் இருப்பதை அடையாளப்படுத்துவதிலும், நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதால், வாகன ஓட்டுநர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.உடுமலை நேரு வீதியில் புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது. நேரு வீதி, பழநி ரோட்டிலிருந்து, உடுமலை நகருக்கு வருவதற்கான பிரதான ரோடாகவும் உள்ளது. பள்ளி மாணவர்கள் நாள்தோறும், அந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.அப்பகுதியில் ரோடு போடப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. பாதாளச்சாக்கடை குழிகள் இருக்கும் பகுதிகளில், எந்த விதமான அடையாளமும் போடவில்லை.மேலும், அந்த குழிகள் இருக்கும் பகுதிகள் மேடு பள்ளமாகவும் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில்அவ்வழியாக வருவதையே தவிர்த்து விட்டனர்.அப்பகுதியில், புதிய நபர்கள் வாகனங்களில் செல்லும்போது, குழிகளில் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாவது சாதாரணமாக நடக்கிறது.நகராட்சி நிர்வாகம் பெயரளவில் ரோட்டை போட்டு விட்டு, அதை முழுமையாக மேம்படுத்தாமல் விட்டிருப்பது பொதுமக்களை பாதித்து வருகிறது.உயிர்ப்பலி ஏற்படும் முன்பு, நகராட்சி நிர்வாகம் பாதாளச்சாக்கடை ஆள் இறங்கு குழிகளை முறையாக சமன்படுத்தி, அடையாளப்படுத்த வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.