| ADDED : ஜூலை 17, 2024 11:58 PM
பல்லடம் : தமிழகம் முழுவதும், நத்தம் வகைப்பாட்டில் உள்ள நிலங்களை, அரசின் இணையதளத்தில் பார்க்கும்போது, 'அரசு நிலம் பத்திரப்பதிவு செய்ய முடியாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், நத்தம் நிலங்களை கிரயம் செய்வது, அடமானம் மற்றும் ஒப்பந்தம் பதிவு செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக பத்திர எழுத்தர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.பத்திர ஆவண எழுத்தர்கள் கூறுகையில், 'நத்தம் நிலங்களை பத்திரப்பதிவு செய்யலாம் என, ஐ.ஜி., உத்தரவிட்டதாக கூறப்படும் நிலையில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலங்களுக்கு மட்டுமே எங்களால் பத்திரப்பதிவு செய்ய முடியும் என்கின்றனர்.இனியும் எத்தனை நாட்கள் பிரச்னை நீடிக்கும் என்று தெரியவில்லை. நத்தம் தொடர்புடைய நிலங்களை முழுமையாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பத்திர பதிவு பணிகள் தடையின்றி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.பல்லடம் சார்-பதிவாளர் உமா மகேஸ்வரியிடம் கேட்டதற்கு, ''கிராம நத்தம் நிலங்களுக்கு ஒதுக்கப்படும் புதிய சர்வே எண்கள் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அவ்வாறு நிர்ணயிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நத்தம் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன,'' என்றார்.