உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஈர நிலம் அந்தஸ்து பெறுகிறதா நஞ்சராயன் குளம்!

ஈர நிலம் அந்தஸ்து பெறுகிறதா நஞ்சராயன் குளம்!

அடர்த்தியான குடியிருப்புகளும், மக்களும் நிறைந்த நகரப்புறங்களில், துாய்மையான காற்றும், மனதை வருடும் சுற்றுச்சூழலும் கிடைப்பது அரிதான விஷயம் தான். அதுவும், தொழில் நகரான திருப்பூரில், காற்று, புகை மாசு என்பது, தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.இருப்பினும், நகரில் இருந்து வெறும் 6 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள நஞ்சராயன் குளம், இயற்கை கொடுத்த வரம் என்று சொல்வதில் மிகையேதும் இருக்க முடியாது. நல்லாறு ஓடையில் வரும் நீர் தான், இக்குளத்துக்கு ஆதாரம்.ஆண்டுமுழுக்க நீர் ததும்பி நிற்கும் இக்குளம் உள்நாடு, வெளிநாட்டு பறவைகள் வந்து போகும் இடமாகவும், அவற்றின் வாழ்விடமாகவும் மாறியிருக்கிறது. 310 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில் இதுவரை, 157 வகை பறவைகள் வந்து செல்வதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, தமிழக அரசால் பறவைகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.வனத்துறை சார்பில் இக்குளத்தை பராமரித்து, மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த குளத்துக்கு, 'ஈர நிலம்' என்ற அந்தஸ்து வழங்க, வனத்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரையும், திட்ட அறிக்கையும் என்பது தான், மகிழ்ச்சியான விஷயம்.-------------------------நகருக்கு கிடைத்த பெருமைநஞ்சராயன் குளத்தில், பறவையினங்கள், சிறு, சிறு பூச்சி, பாலுாட்டி இனங்கள் நிரம்ப உள்ளன; இவை பல்லுயிர் பெருக்கத்துக்கும், சூழல் சமநிலை பெறவும் பேருதவி புரிகின்றன. நல்லாறு வழியாக வரும் மழைநீர் தான், இக்குளத்தில் கலக்கிறது; எனவே, நல்லாற்றில் குப்பை, கழிவுகள் தேங்காதவாறு பார்த்துக் கொள்வது அவசியம். பொதுவாக, நகரை விட்டு ஊரகப் பகுதிகளில் தான், இதுபோன்ற குளம், குட்டைகள் இருக்கும்.ஆனால், நகரையொட்டி நஞ்சராயன் குளம் இருப்பது, திருப்பூருக்கான அதிர்ஷ்டம். 'ஈர நிலம்' என்ற வரையறைக்குள் வந்துவிட்டால், இக்குளம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும். ஈர நிலம் பாதுகாப்பு சார்ந்த தேசிய, மாநில அளவிலான விதிமுறைகளை அமல்படுத்தும் போது, அந்த இடம் மட்டுமின்றி, சுற்றுப்புற சூழலும் பாதுகாக்கப்படும்; தேவையற்ற கட்டுமானங்கள் தவிர்க்கப்பட்டு, திருப்பூரின் மிகச்சிறந்த அடையாளமாக அந்த இடம் மாறும்.- சுரேஷ் கிருஷ்ணன்திருப்பூர் வனத்துறை ரேஞ்சர்-------------------------பல்லுயிர் சூழல் மேம்படும்ஈர நிலம் என்பது, நீர் நிலைகளை பாதுகாப்பதற்கு சமமான ஒரு விஷயம். ஈர நிலங்களை பாதுகாக்க வேண்டும் என குரல், தற்போது அதிகளவில் எழுப்பப்படுகிறது. அதற்கு காரணம், நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் ஒற்றை எதிர்பார்ப்பு தான். ஈர நிலங்களில் நீர்வாழ் தாவரங்கள், பூச்சி, பறவை, விலங்கினங்கள் உள்ளன; மேலும்,எருவை, பெருங்கோரை நாணல் போன்ற புல் வகைகள், அவற்றில் கூடும் பறவையினங்கள் என, பல்லுயிர் பெருக்கத்துக்கு இந்த இடம் பேருதவி புரியும்.பூச்சி, பறவை, விலங்கினங்களின் எச்சத்தில் இருந்து தான், பல்வேறு நன்மை தரும் புல், செடி, கொடிகள் வளர்கின்றன. அதே நேரம், பல ஏக்கர் சுற்றளவுக்கு நிலத்தடி நீராதாரமும் பெருகுகிறது. நஞ்சராயன் குளத்தை ஈர நிலம் என்ற அந்தஸ்துக்குள் கொண்டு வருவது, நகரின் பன்மை சூழலுக்கு உகந்தது. அக்குளத்தில் கழிவுநீர் கலக்காமல் பார்த்துக் கொள்வதை கடமையாக கருத வேண்டும்.- கோவை சதாசிவம்சுற்றுச்சூழலியல் எழுத்தாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை