உடுமலை:தேசிய நெடுஞ்சாலையில் வழியோர தகவல் பலகைகள் அனைத்தும் பராமரிப்பின்றி, மாயமாகி வருவதால், வாகன ஓட்டுநர்கள் பாதித்து வருகின்றனர்.கோவை - திண்டுக்கல் - சாம்ராஜ்நகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை முன், 209 என்ற எண்ணிடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. திண்டுக்கல் - பழநி - உடுமலை - பொள்ளாச்சி என முக்கிய நகரங்கள் வழியாக செல்லும் இந்த நெடுஞ்சாலைக்கு இணையாக, நான்கு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டது.கடந்த சில ஆண்டுகளாக, இந்த நான்கு வழிச்சாலை திட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலை பரமாரிப்பு பணிகள் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.இதனால், மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் முதல் உடுமலை வழியாக அந்தியூர் வரை தேசிய நெடுஞ்சாலை பரிதாப நிலைக்கு மாறி வருகிறது.மழைக்காலத்தில் மடத்துக்குளத்தில் பல இடங்களில், தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்குகிறது; உடுமலை நகரில், கழிவு நீர் ஓடையாகி விடுகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகே, நெடுஞ்சாலை பல்லாங்குழியாக மாறி விட்டது.இதே போல், தேசிய நெடுஞ்சாலையில், வழிகாட்டி, தகவல் மற்றும் எச்சரிக்கை பலகைகள் முழுவதும், பராமரிப்பின்றி மாயமாகி வருகிறது. இதனால், பல இடங்களில், வாகன ஓட்டுநர்கள் தடுமாறியபடி பயணிக்க வேண்டியுள்ளது.கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பழநிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் போதிய தகவல் பலகை இல்லாததால், பணிகள் நிறைவு பெறாத நான்கு வழிச்சாலைக்கு திசைமாறி செல்லும் நிலை உள்ளது.மேலும், அபாய வளைவு பகுதிகள், வேகத்தடை, சந்திப்பு பகுதியிலும் எச்சரிக்கை பலகை இல்லாததால், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.அதிக போக்குவரத்து உள்ள தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக புதுப்பிப்பதுடன், தகவல் பலகைகளையும் முறையாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.