| ADDED : ஜூன் 11, 2024 12:39 AM
திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர் முகாம் நடந்தது.ரெட்டார வலசு மக்கள் அளித்த மனு:தாராபுரம் தாலுகா, ரெட்டாரவலசு பகுதியில், 150 குடும்பங்கள் வசிக்கிறோம். எங்கள் பகுதியில், தார் ரோடு அமைக்ககோரி தொடர்ந்து மனு அளித்தும், எந்த பயனுமில்லை. ஒன்றரை கிலோமீட்டர் துாரத்துக்கு மண் ரோட்டை பயன்படுத்தவேண்டியுள்ளதால், போக்குவரத்துக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. தார் ரோடு அமைத்துக்கொடுக்காதபட்சத்தில், மக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.மனு அளிக்க வந்த பல்லடம் பருவாய் இலங்கை தமிழர் முகாம் மக்கள் கூறியதாவது:முகாமில், 45 குடும்பங்கள், கடந்த 38 ஆண்டுகளாக வசித்துவருகிறோம். எங்களுக்கு வேறு இடத்தில், வீடு கட்டித்தர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு என அனைத்து வசதிகளும் உள்ளதால், தற்போதைய வசிப்பிடத்தைவிட்டு இடம்பெயர எங்களால் இயலாது. எனவே, எங்கள் வசிப்பிடத்திலேயே புதிய வீடு கட்டித்தரவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.திருப்பூர் மாவட்ட செல்போன் சில்லரை மற்றும் மொத்த விற்பனையாளர் சங்கம் சார்பில், ரோட்டோரம் சிம்கார்டு விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தக்கோரி மனு அளிக்கப்பட்டது.