| ADDED : மே 24, 2024 11:15 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரு பணியாக மாநகராட்சி எல்லைக்குள், நொய்யல் ஆற்றின் கரைகள் மேம்படுத்தும் பணி நடக்கிறது.அதன்படி, அணைமேடு முதல் மணியகாரம்பாளையம் பாலம் வரையில் நொய்யல் கரையின் இரு பகுதிகளும் கான்கிரீட் சாய்வு தளம் அமைத்து, கரை மேம்படுத்தப்படுகிறது. மேலும் கரையோரம் ரோடு அமைத்து அதைப் பயன்படுத்தும் வகையிலும் திட்டமிட்டு பணிகள் நடக்கிறது.இதில், சாய்வு தளம் அமைக்கும் பணி பெரும்பாலான இடங்களில் மேற்கொண்டு செய்து முடிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு மையம், மழை நீர் வடிகால், குறுக்கு பாலங்கள் ஆகியன அமையும் இடங்களில் மட்டும் இப்பணி முடிக்கப்படாமல் உள்ளது.இருப்பினும், சாயப்பட்டறை வீதியை ஒட்டி அமைந்துள்ள கரையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள ஆக்கிரமிப்பு பெரிய முயற்சிக்குப் பின் அகற்றப்பட்டு, அங்கு பணி துவங்கியது. இருப்பினும் அங்குள்ள வழிபாட்டு தலம் அகற்றப்படாமல் சாய்வு தளம் அமைக்கும் பணி மேற்கொண்டு தொடராமல் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கிறது.இது குறித்து, மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி, பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில், வடிகால் மற்றும் சாய்வு தளம் அமைக்கும் பணி செய்து முடிக்கப்படும்' என்றனர்.