திருப்பூர்;திருப்பூரில் அனுமதி பெறாத சாய ஆலைகள் மட்டுமின்றி, சில நேரங்களில், அனுமதி பெற்ற ஆலைகளும் கூட, சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை திறந்துவிட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிடுகின்றன.கள்ளிக்காடு தோட்டம், கே.வி.ஆர்., நகர் பகுதிகளில் ஏராளமான சாய ஆலைகள் இயங்குகின்றன. இவற்றில் சில ஆலைகள், சந்தர்ப்பம் பார்த்து, சாயக்கழிவுநீரை ஜம்மனை ஓடையில் திறந்துவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. ஜம்மனை ஓடையில் அவ்வப்போது, வெவ்வேறு வண்ணங்களில் சாயக்கழிவுநீர் ஓடுவதை காணமுடிகிறது.வேலை நாட்களிலேயே நீர் நிலைகளை எட்டிப்பார்க்காத மாசுகட்டுப்பாடு அதிகாரிகள், விடுமுறை நாளிலா வந்துவிடப்போகிறார்கள் என்ற எண்ணத்தில், சனி, ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாட்களில், நீர் நிலைகளில் சாயக்கழிவுநீரை திறந்துவிடுவது தொடர் நிழ்வாகிறது.நேற்று காலை ஜம்மனையில் திறந்துவிடப்பட்ட இளஞ்சிவப்பு நிற சாயக்கழிவுநீர், தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட் பகுதி வழியாக பாய்ந்தோடி, மாநகராட்சி அலுவலகம் பின்புறம், நொய்யலாற்றில் சென்று சேர்ந்தது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை வேதனைக்குள்ளாக்கியது.மாசுகட்டுப்பாடு வாரியம், மின்வாரியம், வருவாய்த்துறை, மாநகராட்சி உள்பட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக்குழுவும் சரிவரச் செயல்படுவதில்லை.மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை அளித்தால், முறைகேடு ஆலைகளின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிடுவதோடு கடமையை முடித்துக்கொள்கிறது, ஒருங்கிணைப்புக்குழு. ---திருப்பூர் ஏ.பி.டி., ரோடு, ஜம்மனை ஓடையில் சாயக்கழிவுநீர் பாய்கிறது.
சாட்டையை சுழற்றுவாரா கலெக்டர்?
பின்னலாடை தொழில் வளர்ச்சியில் உலகையே திரும்பிப்பார்க்கச்செய்துவரும் நிலையில், சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது, திருப்பூரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிடும். இளைய தலைமுறையினருக்கு, துாய்மையான சுற்றுச்சூழலை வழங்கமுடியாமல் போய்விடும்.மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை திறம்பட செயல்படச்செய்து, கலெக்டர் சாட்டையை சுழற்றவேண்டும்.