உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே... தேர்தல் பணிகள் ஜரூர்!முன்னேற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்

ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே... தேர்தல் பணிகள் ஜரூர்!முன்னேற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்

உடுமலை:லோக்சபா தேர்தலுக்கு ஏழு நாட்களே உள்ள நிலையில், ஓட்டுப்பதிவுக்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, உடுமலை சட்டசபை தொகுதியில், 129 ஓட்டுப்பதிவு மையங்களில், 295 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.அதே போல், மடத்துக்குளம் தொகுதியில், 117 ஓட்டுப்பதிவு மையங்களில், 287 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தும், மின்னணு ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும் பணி இரு நாட்களாக நடந்தது.வேட்பாளர்கள் பெயர், சின்னங்களுடன் கூடிய 'பேலட்' பேப்பர், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட்டதோடு, எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம் என, வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் 'விவிபேட்' இயந்திரத்திலும், வரிசை எண் வாரியாக சின்னங்கள் பதிவேற்றும் பணியும் முடிந்துள்ளது.ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.அதே போல், ஓட்டுச்சாவடிகளில் ஏற்கெனவே எண்கள் அமைக்கப்பட்டு, சாய்வு தளம், மின் வசதி, குடிநீர் உள்ளிட்ட வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது, ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தும், பொருட்கள் பிரித்து, ஓட்டுச்சாவடி வாரியாக அனுப்புவதற்கு தயார் செய்யும் பணியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.ஓட்டுச்சாவடிகளில், சின்னங்களுடன் கூடிய வேட்பாளர் பெயர் பட்டியல், ஓட்டுச்சாவடிக்குள் செல்லும் வழி, வெளியேறும் வழிகளை குறிப்பிடும் ஸ்டிக்கர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர் - 1, 2, 3 ஆகிய ஸ்டிக்கர் மற்றும் போஸ்டர்கள் பிரிக்கப்படுகிறது.அதே போல், பாகம் எண் வாரியாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, ஓட்டுச்சாவடி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பதிவு படிவம் (படிவம் 17 ஏ), ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான டைரி, பூத் ஏஜென்ட்களுக்கான பேட்ஜ், பென்சில், ஸ்கேல், கவர்கள், குண்டூசி உள்பட ஸ்டேஷனரி பொருட்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.மேலும் நுால் கண்டு, ரப்பர் ஸ்டாம்ப், மாதிரி ஓட்டுப்பதிவு படிவங்கள், கையேடுகள், வாக்காளர் கைகளில் வைக்கப்படும் அழியாத மை ஆகியவை தயார் செய்யப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு மேற்கொள்ளும் மையத்தில் வைக்கப்படும், தேர்தல் கமிஷன் முத்திரையுடன் கூடிய மறைவு அட்டை, ஓட்டுப்பதிவு முடிந்தபின் இ.வி.எம்., மெஷினில் வைக்கப்படும் பேப்பர் சீல், மெட்டல் சீல் என, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக, ஆறு பிரிவுகளில், 42 வகைகளில், 80 பொருட்கள் ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படுகிறது.தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஒவ்வொரு பொருட்களும் விடுபடாமல் இருக்க அனைத்தையும் தயார் செய்து, ஓட்டுச்சாவடி எண் பதியப்பட்ட, சாக்குகளில் தேர்தல் பொருட்களை வைத்து தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் செய்யப்பட்டு, வரும், 18ம் தேதி, மண்டலம் வாரியாக, ஓட்டுச்சாவடிகளுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவின் போது பயன்படுத்தும் பொருட்கள் வினியோகம் செய்யப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை