திருப்பூர்:'குடிநீர் திட்ட பணிகளை விரைந்துமுடித்து, கோடையில் பொதுமக்களுக்கு, சீரான குடிநீர் கிடைக்கச் செய்யவேண்டும்,' என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடந்தது. வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, நெடுஞ்சாலை, பொதுப்பணி, வேளாண், பட்டு வளர்ச்சி, கால்நடை, கூட்டுறவு, பொது சுகாதாரம், குடும்ப நலத்துறை, பள்ளி கல்வித்துறை, மின் உற்பத்தி, மாவட்ட தொழில்மையம், தொழிலாளர் நல வாரியம், தாட்கோ உள்பட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்ட பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் தலைமை தாங்கி பேசியதாவது:கிராமசாலைகள் மேம்பாட்டு திட்டம், அம்ருத், எண்ணும் எழுத்தும், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்பட அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடிக்கவேண்டும்.கோடைக்காலத்தில், பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி, சீரான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கவேண்டும். எந்தெந்த பகுதிக்கு எவ்வளவு குடிநீர் தேவை என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப வினியோகிக்கவேண்டும். மாவட்டம் முழுவதும் நடைபெற்றுவரும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியமும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், சப்கலெக்டர் சவுமியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, தாராபுரம் ஆர்.டி.ஓ., செந்தில் அரசன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.