உடுமலை;பஸ் ஸ்டாண்ட் அருகே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோட்டில், 'பார்க்கிங்' விதிமீறல் குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பிரியும் பை - பாஸ் ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும், தேசிய நெடுஞ்சாலையில், இணைகிறது.பொள்ளாச்சி, தாரா புரம், திருப்பூர், செஞ்சேரி மலை உட்பட தேசிய, மாநில நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும், பை - பாஸ் ரோட்டின் வழியாகவே பழநி உட்பட பகுதி களுக்கு செல்ல வேண்டும்.அனைத்து நேரங்களிலும், போக்குவரத்து உள்ள ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் அருகே, 'பார்க்கிங்' விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை.குறிப்பாக, ரோட்டிலுள்ள, கடைகள் முன், டூ வீலர்கள் மற்றும் கார்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. ரோட்டின் மீது நிறுத்தப்படும் வாகனங்களால் பிற வாகனங்கள் பை - பாஸ் ரோட்டில், செல்ல முடிவதில்லை.பொள்ளாச்சி உட்பட பகுதிகளில் இருந்து வரும், பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்குள், உள்ளே நுழையும் இடத்தில், திரும்ப போதிய இடம் இல்லாத அளவுக்கு, வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள், பை - பாஸ் ரோட்டில் வரும் வாகனங்களை கவனிக்காமல், திரும்புவதால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.நெடுஞ்சாலைத்துறை சார்பில், பை- பாஸ் ரோட்டில், கடைகள் முன்புள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; ரோட்டோரத்தில், அமைக்கப்பட்டுள்ள 'பார்க்கிங்' கயிறுகளை தாண்டி, வெளியே வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி விடும்.