| ADDED : ஆக 20, 2024 11:00 PM
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, 36வது வார்டு சூசையாபுரம் மேற்கு பகுதியில் மாநகராட்சி துாய்மைப் பணியாளர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு ரோட்டில் கான்கிரீட் ரோடு அமைக்க பொதுநிதியில் திட்டமிடப்பட்டது. இதற்காக அங்குள்ள வீடுகளின் முன் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, புதிய ரோடு அமைக்க அளவீடு செய்ய மூன்று முறை அறிவிப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள், பொறியியல் மற்றும் சர்வே பிரிவினர் அப்பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை துவக்கினர். ஆனால், அதிகாரிகளை தடுத்து நிறுத்திய அப்பகுதியினர், 'தங்கள் வீதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும். அதன்பின், ரோடு அமைக்கலாம்,' என வலியுறுத்தினர். இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. வார்டு கவுன்சிலர் திவாகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் அப்பகுதிக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்த மக்களுடன் பேச்சு நடத்தினர். அதில், பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படும். அதுவரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்படும்,' என அதிகாரிகள் கூறியதால், மக்கள் கலைந்து சென்றனர்.