உடுமலை;உடுமலை பகுதிகளில், 'வனத்துக்குள் திருப்பூர்-10' திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது.மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில் துவக்கப்பட்ட வனத்துக்குள் திருப்பூர் திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.உடுமலை பகுதிகளில், நடப்பாண்டு பருவ மழைகள் முன்னதாகவே துவங்கியதால், நடப்பாண்டு, 10 வது திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியும், முன்னதாகவே துவக்கப்பட்டது.உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் ஏற்கனவே, இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்ய விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்த விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவன வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம், உடுமலை மானுப்பட்டி, தம்புரான் கோவில் அருகே, மணிகண்டனுக்கு சொந்தமான கோழிப்பண்ணை வளாகத்தில், நீர் மருது, கருமருது. சொர்க்கம், பலா, இலுப்பை, வேங்கை, செம்மரம், வேம்பு, மகிழம், புளி, மூங்கில் என, 68 மரக்கன்றுகள் நடப்பட்டது.கோழிப்பண்னை வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்படும் போது, இயற்கையான குளிர் சீதோஷ்ண நிலை ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதால், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இத்திட்டத்தின் கீழ் அதிகளவு நடவு செய்து வருகின்றனர்.அதே போல், விவசாய நிலத்தை வளமாக்கும் வகையிலும், துாய காற்றும், மழையும் மக்களுக்கு சொந்தம்; மரம் நில உரிமையாளருக்கு சொந்தம் என்ற அடிப்படையில், மரச்சாகுபடி திட்டமாக மானாவாரி மற்றும் நீர் பற்றாக்குறை உள்ள நிலங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ், மானுப்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெயமணி தோட்டத்தில், 300 மகா கனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்கள், குளம், குட்டை கரைகள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள், தொழில் நிறுவன வளாகங்களில் இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.மரக்கன்றுகள் நடவு செய்து, மரங்களாகும் வகை பராமரிக்கும் ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.