உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / -உழவர் நலத்துறை ஒருங்கிணைப்பில் சிக்கல்! அரசு தீர்வு காண எதிர்பார்ப்பு

-உழவர் நலத்துறை ஒருங்கிணைப்பில் சிக்கல்! அரசு தீர்வு காண எதிர்பார்ப்பு

உடுமலை;உழவர் நலத்துறையில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் ஒருங்கிணைவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், வேளாண் துறைக்கெனறு தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறையினரை ஒருங்கிணைத்து, 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' கொண்டு வரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.அதன்படி, இத்துறைகளில் பணிபுரியும் களப்பணியாளர்கள், ஒரே துறையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒவ்வொரு களப்பணியாளர்களுக்கும், 2 முதல், 3 வருவாய் கிராமங்கள், அதாவது,1,100 எக்டர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்படும் என,அறிவிக்கப்பட்டது.'இதனால், களப்பணியாளர்களுக்கான பணிச்சுமை குறைவதால், விவசாயிகளுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முடியும்; மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சென்று சேர்ப்பது எளிதாகும்' என தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைய தயக்கம்

'துறைகள் இணைப்பு' திட்டத்திற்கு, தோட்டக்கலைத்துறையினர், துவக்கம் முதலே ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனக்கூறப்படுகிறது.தோட்டக்கலை துறை வாயிலாக தோட்டக்கலை பயிர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் விவசாய உபகரணங்கள், இடுபொருட்கள் அனைத்தும் முழு மானியத்தில், அதாவது, இலவசமாகவே விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.ஆனால், வேளாண் துறையினர் சார்பில், வேளாண் பயிர்களுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள், உபகரணங்கள் அனைத்தும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.சில விவசாய உபகரணங்களுக்கு, மானிய விலை என்பது, சந்தை விலையை விட அதிகமாக இருக்கிறது என்பதும் விவசாயிகளின் குற்றச்சாட்டு. இதனால், விவசாய இடுபொருட்கள், உபகரணங்களை விவசாயிகளிடம் கொண்டு சென்று சேர்க்க சிரமப்படுகின்றனர்; இலக்கை எட்டிப்பிடிக்க முடியாத சூழலும் இருக்கிறது.அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'இரு துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டால், தங்களுக்கான பணிச்சுமை கடினமானதாக இருக்கும்; பெரும்பாலான பணியிடங்கள் குறைக்கப்படும் என்பதால், துறைகள் ஒருங்கிணைய, தோட்டக்கலைத்துறையினர் ஒத்துழைப்பது இல்லை. திட்டம் அறிவிக்கப்பட்டு, ஓராண்டு கடந்துவிட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை