திருப்பூர்;இன்னிசை நிகழ்ச்சிக்காக, ஈஸ்வரன் கோவில் முன் ரோட்டை மறித்து மேடை அமைத்ததற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் தேர்த்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. இடவசதி இருப்பதால், பெருமாள் கோவில் வளா கத்தில், மேடை அமைத்து, தினமும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.இந்நிலையில், மேஸ்ட்ரோ இசைக்குழுவின் தெய்வீக பாடல்கள் நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருமாள் கோவிலுக்கு மாற்றாக, ஈஸ்வரன் கோவில் முன், ரோட்டில் மேடை அமைக்கப்பட்டது. காலை, 11:00 மணி முதல், ரோட்டில் போக்குவரத்தை தடுத்து, மேடை அமைப்பு பணிகள் நடந்தது.தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் ரோட்டை மறித்தது, பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த, 11 நாட்களாக, பெருமாள் கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சி நடந்து வந்த நிலையில், ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் ரோட்டை மறித்து இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இசை நிகழ்ச்சி நடத்துவது என்றால், பெருமாள் கோவில் விழா மேடையில் நடத்தி இருக்கலாம். மாறாக, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி விழா நடத்தக்கூடாதென பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈஸ்வரன் கோவில் ரோடு என்பது, பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் ரோடு.அந்த ரோட்டில், இதுநாள் வரை எவ்வித நிகழ்ச்சியும் நடந்ததில்லை; அப்படியிருந்தும், ரோட்டை மறித்து, மேடை அமைக்க, போலீசார் எவ்வாறு அனுமதி அளித்தனர் என்று, பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதுவே முன் உதாரணமாக மாறிவிடக்கூடாது; நகரில் ஏற்படும் வாகன நெரிசல் குறித்து போலீசுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும், தேவையற்ற வகையில், ரோட்டை மறித்து கலை நிகழ்ச்சி நடத்தும் அத்துமீறலை, இனிவரும் நாட்களில் அனுமதிக்கவே கூடாது.தேவையானபட்சத்தில், கோவிலின் வடக்கே உள்ள குஜராத்திமண்டபம் செல்லும் ரோட்டில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கலாம் என்பது, ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு.