உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடி மையத்தில் எலிகள் படையெடுப்பு குட்டீஸ் அச்சம்

அங்கன்வாடி மையத்தில் எலிகள் படையெடுப்பு குட்டீஸ் அச்சம்

திருப்பூர்;அங்கன்வாடி மையத்தின் முன் மற்றும் வெளிப்பகுதியில், எலிகள் கூட்டமாக நடமாடுவதால், பெற்றோர் அச்சமடைந்து உள்ளனர்.திருப்பூர், 17வது வார் டுக்கு உட்பட்டது, நெசவாளர் காலனி. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை ஒட்டிய பின்புற வளாகத்தில், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. எம்.எஸ்., நகர், திருமலை நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த, 43 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.அங்கன்வாடி மையத்தின் முன் வளாகம் சிமென்ட் தரைத்தளமின்றி, வெறுமனே மண்ணாக உள்ளது. மழை பெய்தால், ஈரப்பதம் அதிகமாகி, ஊர்வனவும் படையெடுக்கின்றன. குறிப்பாக, அங்கன்வாடி மையம் அருகில் ரேஷன் கடையும் செயல்படுவதால், அரிசி, கோதுமை என தானியங்களை சாப்பிட கால்வாய்களில் இருந்து எலிகள் கூட்டம் படையெடுக்கின்றன. இவ்வாறு அங்கன்வாடி மையம் முன்புற வளாகத்தில் எலிகள், அங்கும், இங்கும் ஓடுவது குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.பெற்றோர் கூறுகையில், ''மாநகராட்சி, கல்வித்துறை அலுவலர்களிடம் கூறினோம். அதிகாரிகள் வந்து பார்த்துச் செல்கின்றனர். ஆனால், நடவடிக்கை இல்லை.மழை பெய்து விட்டால், எலிகள் நடமாட்டம் அதிகரிக்கிறது. எனவே, தற்காலிகமாக மண் கொட்டி, தரைத்தளம் அமைத்து, எலி அச்சத்தில் இருந்து குழந்தைகளை மீட்க வேண்டும்'' என்றனர்.திருப்பூர் வடக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார கல்வி அலுவலர் அபராஜிதா கூறுகையில், ''அங்கன்வாடியை சுற்றியுள்ள இடங்கள் பழைய கட்டடங்களாக இருப்பதால், அவற்றை இடித்து விட்டு கட்ட தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அப்பகுதியில் கழிப்பிடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அங்கு குழந்தைகள் செல்லவே வாய்ப்பில்லை. நான்கு பணியாளர்கள் உள்ளனர். தொடர்ந்து, குழந்தைகளை கண்காணித்துக் கொண்டிருப்பர். அங்கன்வாடி மையத்தை நேரில் சென்று பார்த்து, அவ்விடத்தை சுத்தப்படுத்தி, மண் கொட்டி, தரைத்தளம் அமைப்பதற்கான முயற்சி செய்கிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை