உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதிகளில், இயங்கி வந்த அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளி நேரத்திற்கு பஸ்களை இயக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை அரசு போக்குவரத்து கழகம் சார்பில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள கிராமங்களுக்கு, 75க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.பெண்களுக்கு இலவச பயணம் அறிவிப்பால் வருவாய் பாதிப்பு, டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களை கூறி, 25க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கபட்ட பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன.பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலுள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பஸ் பயணத்தை நம்பியுள்ளனர். அவர்களுக்கு, உரிய நேரத்திற்கு பஸ்கள் இல்லாமல், கடுமையாக பாதித்து வருகின்றனர். மேலும், பஸ்களில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள், நெரிசலுடனும், படிக்கட்டில் தொங்கல் பயணம் செய்யும் அவல நிலை உள்ளது.எனவே, காலை, மாலையில் பள்ளி நேரத்துக்கு, நிறுத்தப்பட்ட பஸ்களை உரிய வழித்தடங்களில் மீண்டும் இயக்கவும், உடுமலை, மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம், தேவனுார்புதுார் உள்ளிட்ட பிரதான வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.