உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சினேகம் முறித்த ரயில்!

சினேகம் முறித்த ரயில்!

திருப்பூர் : தினமும் பயணிப்போருக்கு, ரயில்தான் சிறந்த சினேகிதன். திருப்பூரில் இருந்து கோவை, ஈரோடு மற்றும் சேலத்தை இணைக்கும் வகையிலான பாசஞ்சர் ரயிலுக்கு, 15 ஆயிரம் 'சினேகிதர்கள்' உண்டு. ஆனால், ரயிலின் இயக்கம் மூன்றாண்டாக நிறுத்தப்பட்டுள்ளதால், தினமும் பயணித்து வந்த 15 ஆயிரம் பயணிகள் தவிக்கின்றனர்.

நிற்காத ரயில்கள்

பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தில் கோலோச்சும் திருப்பூரில், ரயில்வே உள்கட்டமைப்பு வசதி போதுமானதாக இல்லை. தேவையான ஊர்களுக்குப் போதுமான ரயில்கள் இல்லாத நிலை நீடிக்கிறது.பயணிகளுக்கான பயணக் கட்டணம், பின்னலாடை துணி, மெஷின், வாகனம் உள்ளிட்ட சரக்குகள் அனுப்புதல் என ரயில்வே நிர்வாகம், திருப்பூரில் இருந்து பல லட்சக்கணக்கான ரூபாய் வருவாயைப் பெறுகிறது. திருப்பூர் வழியாக, தினமும், 50 பயணிகள் ரயில்கள் செல்கின்றன. இதில், 10 ரயில்கள் நின்று செல்வதில்லை.

பெங்களூருக்கு ரயில்

பொறியியல் கல்லுாரி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்வேறு தொழில் வாய்ப்புகள் குவிந்து கிடப்பதால், பெங்களூருக்கு திருப்பூரில் இருந்து செல்வோர் எண்ணிக்கை அதிகம். திருப்பூர் - -பெங்களூரு இடையே வாராந்திர ரயில் இயக்கப்பட வேண்டும்.திருப்பூரில் இருந்து சென்னை, நாகர்கோவில், கோவா செல்ல, புதிதாக ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.கோவையில் இருந்து திருப்பூர் வழியாக பயணித்து, ராமேஸ்வரம், திருப்பதி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரியாக மாற்றினால் நிச்சயம் பயணிகள் பயன்பெறுவர்.

பாசஞ்சர் என்னாச்சு?

சேலத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஞாயிறு தவிர வாரத்தின் ஆறு நாட்களும் தினமும் இருமுறை இயக்கப்பட்டு வந்தது. தினமும் 15 ஆயிரம் பயணிகள் பயணித்து வந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது; திரும்ப இயக்கத்துக்கு கொண்டு வரப்படவில்லை. இதில், 5 ஆயிரம் பயணிகள் 'பாஸ்' பெற்றிருந்தனர்.ரயில் இயக்கப்படாததால், 15 ஆயிரம் பயணிகள் தவிக்கின்றனர். பஸ்கள் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களை இவர்கள் பயன்படுத்த வேண்டியிருப்பதால் செலவும் எகிறுகிறது.கூட்ஸ்ெஷட் அருகே ரயில்களை நிறுத்தி இயக்க போதுமான வசதி இருப்பதால், கோவை - திருப்பூர் - ஈரோடு மற்றும் சேலத்தை இணைக்க பகல் மற்றும் இரவில் பாசஞ்சர் இயக்கினால், நான்கு மாவட்டத்துக்கும் பயணிக்கும் பல லட்சம் தொழிலாளர் தினசரி சிரமமின்றி வந்து செல்வர். ஸ்டேஷனில் சுரங்க நடைபாதை வசதியில்லை.முதியோர், 'லக்கேஜ்' கொண்டு வருபவர்கள் படிக்கட்டு ஏறி இறங்க சிரமப்படுகின்றனர். லிப்ட் ஒன்று மட்டுமே உள்ளது. கூடுதலாக ஒரு லிப்ட் மேற்கு புறத்தில் அமைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

எம்.பி.,யின் கடமை

சுப்பராயனே மீண்டும் எம்.பி., யாக தேர்வாகியுள்ளார். மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் நடத்தும் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் எம்.பி., பங்கேற்க வேண்டும். திருப்பூருக்கு தேவையான ரயில்கள், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஒன்று விடாமல் கேட்டு பெற வேண்டும். பெற முடியவில்லை என்றால், ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரியத்தில் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ