| ADDED : ஜூன் 08, 2024 11:45 PM
அவிநாசி;திருமுருகன்பூண்டியிலுள்ள ஸ்ரீ பூமி நீளா ஸமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்காக யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.திருமுருகன்பூண்டி, ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வரும் 16ம் தேதி காலை 6:30 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள், 14ம் தேதி முதல் துவங்குகிறது.யாகசாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. யாகசாலையில் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் மற்றும் தாயாருக்கு பஞ்சாக்கினி எனும் ஐந்து பிரதான யாக குண்டங்கள், பரிவார மூர்த்திகளுக்கு நான்கு குண்டங்கள், பிரதான வேதிகையில் பெருமாள் மற்றும் தாயாருக்கும் கலசங்கள், அதனை சுற்றிலும் உள்ள வேதிகையில் உற்சவர்களுக்கான கலசங்கள் ஆகியவை வைக்கப்படும்.முன் பகுதியில் உள்ள சக்கராத்த மண்டலத்தில் பெருமாள், தாயார், உற்சவர், விமான கலசம், சோம கும்பம் ஆகியவை வைக்கப்படும்; ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது என கோவில் பட்டாச்சாரியார்கள் தெரிவித்தனர்.ஏற்பாடுகளை செயல் அலுவலர் விமலா, அருள்மிகு திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை திருப்பணி குழு, ருத்ராபிஷேக குழு, சேக்கிழார் புனிதர் பேரவை, அறங்காவலர் குழுவினர் மற்றும் கரிவரதராஜ பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.