| ADDED : ஜூலை 17, 2024 12:30 AM
உடுமலை;மழைக்காலத்தில் நுழைவாயிலில் தேங்கும் தண்ணீரால், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தத்தளித்தபடி செல்லும் நிலைக்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.உடுமலை அருகே பெதப்பம்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்றுப்பகுதியை சேர்ந்த, 600க்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தாராபுரம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி பள்ளி வளாக நுழைவாயில் அமைந்துள்ளது.இந்நிலையில், மழைக்காலத்தில், பெதப்பம்பட்டி நால்ரோடு சுற்றுப்பகுதியில் இருந்து வரும் மழை நீர், பள்ளி வளாகத்துக்குள் சென்று விடுகிறது; நுழைவாயிலிலும் பல அடிக்கு தண்ணீர் தேங்குகிறது.இதனால், மாணவ, மாணவியர் மழைநீரிலும், சேறும், சகதியை தாண்டி பள்ளிக்குள் செல்ல வேண்டியுள்ளது. தாராபுரம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருந்த மழை நீர் வடிகால் வழியாக, மழை நீர் ஓடைக்கு சென்று வந்தது.இந்த வடிகாலை முறையாக பராமரிக்காமல் விட்டதால், தற்போது மழை நீர் பள்ளி வளாகத்துக்குள் சென்று விடுகிறது.பல நாட்களுக்கு தண்ணீர் தேங்குவதால், கொசு உற்பத்தி அதிகரித்து, நோய்த்தாக்குதல் பரவும் அபாயம் உள்ளது.கனமழை பெய்தால், பாதிப்பு அதிகரிக்கும் என்பதால்,உடனடியாக இப்பிரச்னைக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.