| ADDED : ஜூலை 08, 2024 10:31 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், படியூர் ஊராட்சி, ஒட்டப்பாளையம் கிராமத்தில், 60 குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த, இரு வாரம் முன் நள்ளிரவில் வீடுகள் மீது கற்கள் விழுந்தது. யாராவது வீசியிருக்கலாம் என்று மக்கள் சந்தேகப்பட்டனர்.ஆனால், தொடர்ச்சியாக இரவு நேரங்களில் சிறிய, பெரிய கற்கள் ஒவ்வொரு வீடுகள் மீது விழ ஆரம்பித்தது. இதில், 9 வீட்டில் ஓடுகள் உடைந்து சேதமானது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரவு நேரத்தில் விழுந்த கற்களால் பீதியடைந்த மக்கள், அப்பகுதியில் உள்ள கோவிலில் தங்கியினர்.இதனால், சிறியவர் முதல் பெரியவர் வரை, ஊர் கிராம மக்கள் துாக்கத்தை தொலைத்தனர். இதுகுறித்து படியூர் ஊராட்சி மற்றும் காங்கயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்தனர். ஆனால், கற்கள் விழுவது குறித்தும், யார் வீசுவது குறித்து கண்டுபிடிக்க முடியவில்லை. பகலிலும், இரு முறை வீடுகள் மீது கற்கள் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இச்சூழலில், படியூர் ஊராட்சி தலைவர் ஜீவிதா, முன்னாள் தலைவரான அவரது கணவர் சண்முகசுந்தரம், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர், மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், கிராமத்தின் முக்கிய இடங்களில், ஐந்துக்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமராக்கள், 20 'போகஸ் லைட்' மற்றும் கிரேன் வாயிலாகவும் கண்காணித்து வருகின்றனர்.----ஒட்டப்பாளையத்தில் வீடுகள் மீது கற்கள் விழுவதை கண்காணிக்க, கிரேனில் மற்றும் 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிக்கும் பொதுமக்கள்.