| ADDED : ஜூலை 17, 2024 11:54 PM
பொங்கலுார் : விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்பு தட்கல், சுயநிதி, இலவசம் என்ற பிரிவின்கீழ் வழங்கப்படுகிறது. 'தட்கல்' திட்டத்தில் ஐந்து ஹெச்பிக்கு, 2.5 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதற்கு பணம் கட்டிய உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும். சுயநிதிப்பிரிவு, 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் என கட்டணம் செலுத்த வேண்டும். சுயநிதி திட்டத்தில், 2018 வரை பதிவு செய்தவர்களுக்கும், இலவச மின் இணைப்பு திட்டத்திற்கு, 2013ம் ஆண்டு வரை பதிவு செய்தவர்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அப்போது, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று கடந்த பிப்., மாதம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், முதல்வரின் அறிவிப்பு காற்றோடு போய் விட்டது. சுயநிதி திட்டத்தில் பணம் கட்டியவர்கள், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் இலவச மின் இணைப்பு வேண்டி பதிவு செய்தவர்கள் என ஏராளமான விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் மின்வாரியம் இழுத்தடித்து வருகிறது.மீண்டும் முதல்வர் அறிவித்தால் தான் மின் இணைப்பு வழங்குவோம் என்று மின் வாரிய அதிகாரிகள் பிடிவாதமாக உள்ளனர். ஆனால், ஏற்கனவே அறிவித்த திட்டத்துக்கு மீண்டும் அறிவிப்பு எதற்கு என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.