திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 4வது மண்டல குழு கூட்டம் நேற்று முருகம்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடந்தது.மண்டல தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல உதவி கமிஷனர் வினோத், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம் வகித்தனர்.கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:* சேகர் (அ.தி.மு.க.,): மாநகராட்சி பகுதியில் புதிய கடைகள், வணிக வளாகங்களுக்கு சொத்து வரி விதிப்பு செய்யப்படாமல் மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது. இதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. காலேஜ் ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகரிக்கிறது. மாநகராட்சி கூட்டத்தில் குறிப்பிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.* அருணாசலம் (இ.கம்யூ.,): பலவஞ்சிபாளையம் காளிகுமாரசாமி கோவில் முதல் வீரபாண்டி செல்லும் ரோட்டில், 4 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை பணி துவங்கும் என அறிவித்து இரண்டாண்டு ஆகி விட்டது. இது வரை பணி துவங்குவதற்கான அடையாளமே தெரியவில்லை. தெருவிளக்கு பிரச்னை தீர்க்கப்படாமலே உள்ளது. அதிகாரிகளிடம் புகார் கூறியும், எந்த பயனும் இல்லை. மாநகராட்சி கூட்டத்தில் இது குறித்து பேசினால் மண்டல கூட்டத்தில் பேசுங்கள் என்கின்றனர். மண்டல கூட்டத்தில் பேசினால் மாநகராட்சி கூட்டத்தில் பேசுங்கள் என்று கூறுகிறீர்கள். எங்கு பேசி, இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது என்று தெரியாமல் தவிக்க வேண்டியுள்ளது.* கவிதா (தி.மு.க.,):பலவஞ்சிபாளையம் சமுதாயகூடம் நீண்ட நாளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாய் உடைப்பு பல பகுதியில் உள்ளது. இதனால் குடிநீர் சப்ளை 15 நாளாகிறது.* சுபத்ராதேவி (தி.மு.க.,): அய்யன் நகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர்கள் இல்லை. நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். செவிலியர்கள் மட்டுமே மருத்துவம் பார்க்கும் அவலம் நீடிக்கிறது. குடிநீர் இணைப்பு கொடுப்பதோடு சரி. தண்ணீர் வருகிறதா என்று கூடப் பார்ப்பதில்லை. பத்து வீட்டுக்கு இணைப்பு கொடுத்தால், நான்கு வீடுகளுக்கு தண்ணீர் வருவதில்லை.* சாந்தாமணி (ம.தி.மு.க.,) :குடிநீர் குழாய் இணைப்பு பணி முடிக்காமல் தாமதமாகிறது. இதனால் ரோடு பணிகள் தாமதமாகிறது. மங்கலம் ரோட்டில், கருவம்பாளையம் வரை சாக்கடை கால்வாய் வசதி இல்லை. கடந்த 25 ஆண்டாக இப்பிரச்னை உள்ளது. மழை நாட்களில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.* சாந்தி (தி.மு.க.,): சின்னியகவுண்டன் புதுார் பகுதியில் சாக்கடை கால்வாய் முழுவதும் குப்பை கழிவு மற்றும் மண் தேங்கி கிடப்பதால் கழிவு நீர் செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. * மணிமேகலை (மா.கம்யூ.,):தெருவிளக்கு பிரச்னை, குடிநீர் பிரச்னை மற்றும் ரோடு போன்ற பல்வேறு பிரச்னைகள் வார்டு பகுதியில் உள்ளது. அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடிவதில்லை. எந்த ஒரு பணியும் விரைந்து முடிப்பதில்லை. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.* சாந்தாமணி (தி.மு.க.,): பல வீதிகளில் தெருவிளக்கு பிரச்னை தீர்க்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கூறினாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குப்பை முறையாக அகற்றுவதில்லை. பேட்டரி வாகனம் பற்றாக்குறையாக உள்ளது. குமரன் கல்லுாரி அருகே ஸ்பீடு பிரேக்கர் அமைக்க வேண்டும்.* ஆனந்தி (அ.தி.மு.க.,): துாய்மைப் பணிக்கான பேட்டரி வாகனங்கள் சரிவர இயங்குவதில்லை. இதனால் அதிக அளவில் குப்பை பல இடங்களில் தேங்கி கிடக்கிறது. பல பகுதிகளில் போர்வெல் தண்ணீர் வருவதில்லை, இதனால் குடிநீரை கழிப்பறைக்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.மண்டல தலைவர் பத்மநாபன்:அடிப்படை பிரச்னையான குடிநீர் பிரச்னை, ரோடு வசதி, தெரு விளக்கு, சாக்கடை கால்வாய், சுகாதாரப் பணி போன்ற பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தெரு விளக்கு பிரச்னை தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருகிறது. உரிய மற்றும் உடனடி தீர்வு காணாவிட்டால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கவுன்சிலர்களும், அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.