| ADDED : மே 21, 2024 12:43 AM
அவிநாசி;அவிநாசி - மங்கலம் ரோட்டில் இருந்து சீனிவாசபுரம் செல்லும் பகுதியில் ரோட்டரி ஹால் அருகில் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன.அங்குள்ள குடியிருப்புகள், சீனிவாசபுரம் தாமரைக் குளத்தின் கரைப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் ஆகியவற்றுக்கும் மின் வினியோகம் செய்வதற்காக, தாமரைக்குளத்தின் கரைப்பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் மின் கம்பங்கள் நடப்பட்டன.மின் கம்பங்கள் நடும்போதே அப்பகுதியினர் களிமண் பூமியில் மின்கம்பங்கள் நடப்பட்டால் நீண்ட நாளைக்கு நிற்காது; சாய்ந்து விடும் என தெரிவித்துள்ளனர்.அதற்கு மின்வாரியத் துறையினர், கான்கிரீட் கலவை கொண்டு குழிகள் நிரப்பப்பட்டு மின் கம்பங்களுக்கு உறுதித் தன்மை ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்ததாக அப்பகுதியினர் கூறுகின்றனர். ஆனால் நடவடிக்கை இல்லை.கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக களிமண் இளகி மின்கம்பங்கள் சாயத் துவங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, மின் வாரியத்தினர் உடனடி நடவடிக்கை எடுத்து, ஆபத்தான நிலையிலுள்ள மின் கம்பங்களை உடனே மாற்றி அமைக்க வேண்டும்.