உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறை தீர் கூட்டம் நடத்துவதிலும் குறை! இரு தாலுகா விவசாயிகள் வேதனை

குறை தீர் கூட்டம் நடத்துவதிலும் குறை! இரு தாலுகா விவசாயிகள் வேதனை

உடுமலை;சாகுபடி சீசன் துவங்கியுள்ள நிலையில், கோட்ட அளவிலான குறை தீர் கூட்டம் நடத்தப்படாமல் இருப்பதால், நீர்நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து, பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கும், அமராவதி அணையிலிருந்து, ஆயக்கட்டு விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், நெல், கரும்பு, மக்காச்சோளம், காய்கறிகள் என அனைத்து சாகுபடி பணிகளும் தீவிரமடைந்துள்ளது. இச்சாகுபடி பணிகளிலும், நீர் நிர்வாகத்திலும் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக, பி.ஏ.பி., மண்டல பாசனத்தில் கடைமடைக்கு போதிய தண்ணீர் கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு விவசாயிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல், பரவலாக உரத்தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.முக்கிய சாகுபடி சீசனில் பிரச்னைகளுக்கு தீர்வு காண, அரசுத்துறையினர் உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.ஆனால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவை உள்ளடக்கி, கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் கூட நடத்தப்படாமல் உள்ளது.விவசாயிகள் கூறியதாவது: சாகுபடி சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும், புகார் தெரிவிக்கவாவது விவசாயிகள் குறை தீர் கூட்டம் பயன்பட்டு வந்தது.அக்கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்பதால், புகார்களுக்கு விளக்கமாவது கிடைத்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, உடுமலை வருவாய் கோட்ட அளவிலான குறை தீர் கூட்டம் நடத்தப்படவில்லை.பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க மனு கொடுக்கும் குறை தீர் கூட்டம் நடத்தவே, மனு கொடுக்க வேண்டிய நிலை இப்பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கூட்டம் நடத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ