| ADDED : ஜூலை 27, 2024 02:15 AM
உடுமலை:'இறைவனை நோக்கி கைகூப்பி வணங்கினால் மட்டும் போதும், அவரின் கருணையையும், அனைத்து ஆசிகளையும் பெற முடியும்,' என திருக்குடந்தை வேங்கடேஷ் பேசினார்.உடுமலை ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை சபா சார்பில், 77ம் ஆண்டு ஆடி மாத ஆன்மிக உபன்யாஸம் நடைபெற்று வந்தது.இதில், அன்றாட வாழ்க்கையில் பகவத் கீதை மற்றும் அஞ்சலி வைபவம் (பெருமாளை ஏன் கை கூப்பி வணங்குகிறோம்) என்ற தலைப்பில், திருக்குடந்தை வேங்கடேஷ் பேசியதாவது: ராமாயணத்தில், சுக்ரீவனுக்கு, 'ராமரை நோக்கி கைகூப்பி வணங்கு,' என அனுமன் அறிவுரை தெரிவிக்கிறார். இதே போல், கஜேந்திரன் எனும் யானையும், பெருமாளை கைகூப்பும் வகையில் தும்பிக்கையால் வழிபாடு செய்கிறது.இறைவனை நோக்கி எப்படி கை கூப்பினாலும், அதற்கு பலன் உண்டு. உடலாலும், மொழியாலும், மனதாலும் என எவ்வடிவிலும் இறைவனை வழிபடலாம். இறைவனிடம் ஏற்றத்தாழ்வு கிடையாது.'நாம் சந்தனம் சமர்ப்பிக்கும் போது, பெருமாள் எப்படி குளிர்கிறரோ அதை விட, நாம் கை கூப்பும் போது அதிகமாக குளிர்கிறார். தீபாராதனையை விட கைகூப்பும் போது, அதிகமாக ஒளிர்கிறார்,' என கை கூப்பி வணங்குதலின் சிறப்புகளை தேசிகர் தெரிவித்துள்ளார்.