| ADDED : மே 09, 2024 11:29 PM
உடுமலை;உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் காட்சிப்பொருளாக மாறியுள்ள, சுத்திகரிப்பு கருவியை சீரமைத்து, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகளின் போது, உடுமலை ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தப்பட்டது. அப்போது, பயணியரின் குடிநீர் தேவைக்காக 'ப்ளாட்பார்ம்'களில் போதிய இடைவெளியில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது.மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்ற பிறகு ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்த இடைவெளியில், ரயில்வே ஸ்டேஷனை ஆக்கிரமித்த 'குடி'மகன்களால், குடிநீர் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டது.இதையடுத்து, பொள்ளாச்சி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில், 2018ல், சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. அதன்வாயிலாக பயணியர் பயன்பெற்று வந்தனர்.இந்நிலையில், குடிநீர் சுத்திகரிப்பு கருவியும், பழுதடைந்து நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து காத்திருக்கும் பயணியர், குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், கடைகளும் இல்லாததால், ராஜேந்திரா ரோடு வளைவில் உள்ள குழாயில், தண்ணீர் பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.குடிநீர் சுத்திகரிப்பு கருவியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், குடிநீர் குழாய்களை சமூக விரோதிகள் சேதப்படுத்தாமல் இருக்க, தேவையான கட்டமைப்புகளையும் ரயில்வே நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அனைத்து நேரங்களிலும் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.