| ADDED : மே 01, 2024 11:27 PM
திருப்பூர் : மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் கோடையில் மக்களுக்குப் பயன்படும் விதமாக உள்ளது. சில இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வைக்கப்படாமல் உள்ளது.கோடைக் காலம் துவங்கிய நிலையில், வெயில் வெளுத்து வாங்குகிறது. அனல் வீசும் வெப்பம் காரணமாக பகல் நேரங்களில் ரோடுகளில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கொளுத்தும் வெயிலால், அவதிப்படும் மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு பகுதிகளில் தன்னார்வலர்கள், வர்த்தகர்கள், தனி நபர்கள், கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் என பல தரப்பினரும் நீர் மோர் பந்தல் அமைத்து சேவையாற்றி வருகின்றனர்.அவ்வகையில், திருப்பூர் நகரில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஓலை பந்தல் அமைத்து குடிநீர் வழங்கப்படுகிறது.ஓ,ஆர்.எஸ்., கரைசல் பாக்கெட்டுகள் வைத்து, தேவையானோருக்கு வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.ஆனால், மாநகராட்சி தண்ணீர் பந்தல்கள் சிலவற்றில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் பாக்கெட்டுகளை காணவில்லை.