திருப்பூர்:திருப்பூர் நகரம் மற்றும் அவிநாசி உள்ளிட்ட ஊரகப்பகுதிகளில் டூவீலர் மற்றும் மொபைல்போன் திருடு போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.தொழில் நகரமான திருப்பூரில் உள்ளூர், வெளிமாவட்ட மற்றும் பிற மாநில மக்கள் அதிகளவில் வசிக்கும் நிலையில், மக்கள் தொகை அடர்த்தி அதிகம். இதை சாதகமாக்கி வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் பலரும் ஈடுபடுகின்றனர்.சமீபமாதங்களாக திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட இடங்களில், டூவீலர் திருடு போவது அதிகரித்து வருகிறது. வீடு, கடை உள்ளிட்ட இடங்களுக்கு வெளியே நிறுத்திவிட்டு செல்லும் டூவீலர்களை, மர்ம ஆசாமிகள், நோட்டம் விட்டு களவாடி செல்கின்றனர். சிறிய மொபட் துவங்கி, 2, 3 லட்சம் ரூபாய் விலையுள்ள கேடிஎம் புல்லட் உள்ளிட்ட பைக்குகள் வரை திருடிச் செல்கின்றனர்.எப்படி நடக்கிறது?நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் டூவீலரை அதன் உரிமையாளர்கள் பூட்டி விட்டு சென்றாலும், லாவகமாக 'லாக்' நீக்கி, டூவீலரை எடுத்துச் சென்று விடுகின்றனர். திருடப்படும் டூவீலரை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபடுவோரிடம் அவற்றை விற்று, கிடைக்கும் பணத்தை வாங்கிக் கொள்கின்றனர். 'திருடப்படும் டூவீலரை வாங்கி விற்கும் தொழிலில் ஏஜன்ட்கள் போன்றே சிலர் ஈடுபடுகின்றனர்' என்கின்றனர் போலீசார்.டூவீலர் திருடும் சிலர், அதை பழைய இரும்பு வியாபாரிகளிடம், கிடைக்கும் விலைக்கு விற்று விடுகின்றனர். அவர்கள் வாகனத்தின் உதிரிபாகங்களை தனித்தனியாக கழட்டி, விற்கின்றனர். இன்னொரு தரப்பினர் திருடிய டூவீலரை, தங்களின் திருட்டு தொழிலுக்கு பயன்படுத்துகின்றனர். அதாவது, இரவில் வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் போது, திருடிய டூவீலரில் பயணிக்கின்றனர். இதுபோன்ற சமயங்களில் போலீசாரிடம் சிக்கினாலும், டூவீலரை விட்டு, விட்டு ஓட்டம் பிடித்து, தப்பித்து விடுகின்றனர்.வழக்குப்பதிய தயக்கம்போலீஸ் ஸ்டேஷனில், எப்.ஐ.ஆர்., வாயிலாக பதியப்படும் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டியது கட்டாயம் என்ற நிலையில், டூவீலர் திருட்டு தொடர்பான வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயங்குகின்றனர். எனவே, டூவீலர் பறிகொடுத்தவர்கள் வழங்கும் புகார் மீது, மனு ரசீது மட்டுமே வழங்குகின்றனர். திருட்டில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்பது கடினமான காரியம் என்பதால் தான், போலீசார் வழக்குப்பதிவு செய்ய தயங்குகின்றனர்; எப்.ஐ.ஆர்., பதிவு செய்தால், அந்த வழக்கின் நிலை குறித்து உயரதிகாரிகள் அவ்வப்போது கேள்வி எழுப்புவர்; இதில் இருந்து தப்பிக்கவும், வழக்குப்பதிவு செய்வதை போலீசார் தவிர்க்கின்றனர்.
தீர்வு தான் என்ன?
போலீசார் சிலர் கூறுகையில்,'டூவீலர் திருட்டில் ஈடுபடுவோர் விலையுயர்ந்த 'புல்லட்' உள்ளிட்ட டூவீலர்களையும் தடுக்க, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் 'சி.பி.எஸ்.,' (சைபர் பிஸிகல் சிஸ்டம்) எனப்படும் உபகரணத்தை பொருத்திக் கொள்ள வேண்டும். இந்த உபகரணத்தில் பொருத்தப்பட்ட 'சிம் கார்டு' உதவியுடன், அவரவர் மொபைல் போனிலேயே அந்த வாகனம் எங்கு செல்கிறது; யாரால் எடுத்துச் செல்லப்படுகிறது என்ற விவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும்' என்றனர்.