உடுமலை;உடுமலை பகுதியில், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள, சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த, கரிமூட்டம் அமைத்து, மரக்கரி உற்பத்தி செய்யும் தொழிலாளர்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.உடுமலை சுற்றுப்பகுதியில், புறம்போக்கு நிலங்கள், ரோட்டோரங்கள், தரிசு நிலங்கள், ஓடை, பள்ளம், மண் கால்வாய்கள், குளத்தின் கரைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில், சீமை கருவேலன் மரங்கள், அதிகளவு உள்ளன.இவ்வகை மரங்கள் நிலத்தடி நீர்மட்டத்துக்கும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதால், அவற்றை அகற்ற, சில ஆண்டுகளுக்கு முன் கோர்ட் வழிகாட்டுதல்படி, அரசு சார்பில், அப்போது, சீமை கருவேல மரங்கள் அகற்றும் இயக்கம் துவக்கப்பட்டது.இத்திட்டம் கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் சீமைகருவேலன் மரங்கள் பரவல் அதிகரித்துள்ளது. இவ்வகை மரங்கள் பரவலை தடுக்க, கிராமங்களில், கரிமூட்டம் அமைத்து மரக்கரி உற்பத்தி செய்யும் தொழிலாளர்களை அரசு ஊக்குவிக்கலாம்.சீமை கருவேலன் மரங்களை வெட்டி, அதனை வெட்டி துண்டுகளாக்கி ஒரே இடத்தில் குவித்து களிமண்ணால், மூடி காற்று வெளியேறாத வகையில் சூளைபோல் உருவாக்குகின்றனர்.இந்த அமைப்புக்கே, 'கரிமூட்டம்' என்கின்றனர். இதில், 5 டன் வரை மரத்துண்டுகளை அடுக்குகின்றனர். பின், விறகிற்கு தீ வைத்து எரிக்கின்றனர். இதில், 5 நாட்கள் வரை எரியவிட்டு மூட்டத்தை திறக்கும் போது, மரக்கரி கிடைக்கிறது.இவ்வகை கரி, டீக்கடைகள் மற்றும் கோழிப்பண்ணைகளில் பயன்படுத்தப்படுகிறது. தேவை இருந்தும், சீமை கருவேலன் மரங்களை வெட்ட, நிலவும் சிக்கல்களால் இத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உட்பட அரசுத்துறைகளுக்கு சொந்தமான நிலத்தில், வளர்ந்துள்ள சீமை கருவேலன் மரங்களை வெட்ட அனுமதி கிடைப்பதில்லை.தனியார் விளைநிலங்களிலுள்ள சீமை கருவேலன் மரங்களை விலை கொடுத்து, வாங்க வேண்டியுள்ளது. இதனால், தொழிலாளர்கள் கரிமூட்டத்துக்கு தேவையான மரத்துண்டுகள் கிடைக்காமல், வேலைவாய்ப்பு இழக்கின்றனர்.தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவவும், சீமை கருவேலன் மரங்கள் பரவலை கட்டுப்படுத்தவும், அரசு இத்தொழிலை முறைப்படுத்த வேண்டும்.இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நல வாரியங்கள் வாயிலாக, அடையாள அட்டை வழங்க வேண்டும்; பகுதிவாரியாக சீமை கருவேலன் மரங்களை வெட்ட, அனுமதி அளித்தால், மரங்கள் பரவுவது குறைவதுடன், தொழிலாளர்களின் குடும்பத்தினரும் பயன்பெறுவார்கள் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.