பெருமாநல்லுாரில் உள்ள கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப்பெருமாள் கோவில் மஹா கும்பாபிேஷகம், வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இத்திருத்தலங்களின் மகிமை குறித்து காண்போமா!தட்சிணகாசி என்று அழைக்கப்படும் அவிநாசிக்கு கிழக்கே, 6வது கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது பெரும்பழனாபுரி எனும் பெருமாநல்லுார். அங்குள்ள உத்தமலிங்கேஸ்வரர் கோவில், விஜயமங்கலம் சிவாலயம், திருமுருகன்பூண்டி கோவில்கள், ஒரே நேர்கோட்டில் மேற்கு நோக்கி அமைந்துள்ளன.காசி சென்று வழிபடும் புண்ணிய பலாபலன்கள், மேற்கு நோக்கிய சிவாலயங்களில் வழிபட்டாலே கிடைக்கும் என்று சைவ சித்தாந்த நுால்கள் எடுத்துரைக்கின்றன. அவ்வகையில், மேற்கு நோக்கியபடி அருள்பாலிக்கும் கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், அருளுரையும் ஆற்றல் பொருந்திய புண்ணிய தலமாகவும் திகழ்கிறது.இக்கோவிலை, சோழர்கள் எழுப்பியுள்ளனர்; சேரர்கள் காலத்தில், கோவர்த்தனாம்பிகை கோவில் கட்டப்பட்டுள்ளது. பாண்டியர் காலத்தில், திருமதில் போன்ற திருப்பணி நடந்துள்ளதை, சுவற்றில் துள்ளும் மீன் சிற்பங்களின் மூலம் அறிய முடிகிறது. கோவில் சிவாச்சாரியார் நாகராஜன் கூறுகை யில், ''கலியுகம் பிறந்து, தீவினை அதிகரித்த போது, இப்பகுதியில் மண்மாரி பொழிந்துள்ளது; பரமசிவனை நோக்கி, அன்னை பார்வதி தவம் இருந்தாள். சிவபெருமான் மண் மாரியை தடுத்து, உயிர்களை ஆட்கொண்டார், கோவர்த்தனாம்பிகை, இத்தலத்தில், தவக்கோலத்தில் அருள் பாலிக்கிறாள். பக்தருக்கு, மலை போன்ற துன்பமும் பனி போல் மறையும்,'' என்றார்.