இறைச்சி கடைகளுக்கு நாய்கள் விற்கப்பட்டதா?
பல்லடம்: திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில், பல்லடம் போலீசில் அளிக்கப்பட்ட புகார்:பல்லடம் அடுத்த ராசாகவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள, 40க்கும் மேற்பட்ட தெரு நாய்களை விரட்டிப் பிடித்து, கால்களை கட்டி மினி ஆட்டோவில் ஏற்றி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக, கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரால் தகவல் கிடைத்தது.இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் கிடைத்துள்ளன. நாய்களை கொடுமைப்படுத்தியவர்கள், ஆட்டோவில் ஏற்றிச்சென்ற அதன் உரிமையாளர், ஓட்டுனர் ஆகியோர் மீது, பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில், பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.