| ADDED : ஜூன் 26, 2024 02:33 AM
திருப்பூர்:பொங்குபாளையம் ஊராட்சியில் ஜல்லி கொட்டிய நிலையில் நீண்ட நாளாக தார் ரோடு போடும் பணி கிடப்பில் உள்ளது.திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சியில், பாபுஜி நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதிக்கு பிரதான ரோட்டிலிருந்து செல்லும் வகையில் ரோடு உள்ளது. நீண்ட காலம் முன்னர் போட்ட ரோடு என்பதால் பெருமளவு சேதமடைந்து, சிரமம் நிலவியது.இதனால், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ் இந்த ரோட்டை புதிய ரோடாக மாற்ற கோரிக்கை விடுத்தார். அதனால், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 225 மீ., நீளத்துக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரோடு அமைக்கும் பணி துவங்கியது. அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:ஜல்லி போட்டு முடித்து ஒரு மாதமாகியும் இது வரை தார் ரோடு போடவில்லை. இப்பணி குறித்து முதலில் ஒரு பிளக்ஸ் பேனர் வைத்தனர். தற்போது நிரந்தர போர்டு அமைக்கப்பட்டுள்ளது. ரோடு பணி மேற்கொண்டு நடக்குமா, தார் ரோடு போட்டு முழுமை பெறுமா எனத்தெரியவில்லை. போர்டு மட்டும் வைத்து விட்டு ரோடு போடாமல் விட்டு விடுவார்களோ என சந்தேகமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.