4வது முறையாக முதலிடம் பெறுமா? பிளஸ் 2 தேர்வில் சாதிக்கும் நம்பிக்கையுடன் நம் மாவட்டம்
திருப்பூர்: நான்காவது முறையாக மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறும் நம்பிக்கையுடன் திருப்பூர் மாவட்டக் கல்வித்துறை உள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வில் சாதிக்கும் எண்ணத்துடன் முனைப்பு காட்டி வருகிறது.கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில், 97.45 சதவீத தேர்ச்சி பெற்று, திருப்பூர் கல்வி மாவட்டம், மாநிலத்தில் முதலிடம் பெற்றது.பாடங்களிலும், பள்ளி அளவிலும், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அரசு, மாநகராட்சி பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களும், 95 சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்ததால், முதலிடம், சாத்தியமானது.நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 25, 863 பேர் எழுதுகின்றனர். இந்த எண்ணிக்கை, கடந்தாண்டை விட 2,020 அதிகம். மாணவர் குறைவாகவும், மாணவியர் அதிகமாகவும் (13, 863 பேர்) தேர்வெழுத உள்ளனர். நடப்பாண்டு, திருப்பூர் கல்வி மாவட்டம் பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பெற்றால், நான்கு முறை மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாவட்டங்கள் பட்டியலில் திருப்பூர் கல்வி மாவட்டமும் வரும்.கடந்த, 2019, 2020ம் ஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சியில் தொடர்ந்து முதலிடம் பெற்ற திருப்பூர், 2024ல் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியது. ''நடப்பு கல்வியாண்டிலும் முதலிடத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை மாவட்ட கல்வித்துறை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது'' என்கின்றனர், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்.10ம் வகுப்பு தேர்ச்சிசறுக்கிய திருப்பூர்கடந்த, 2023ம் கல்வியாண்டு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், 11வது இடத்தில் இருந்த திருப்பூர் மாவட்டம், கடந்தாண்டு (2024) 11 இடங்கள் பின்தங்கி, 21வது இடம் பெற்றது. வழக்கமாக தேர்ச்சி சதவீதம் உயர கைகொடுக்கும் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம் சறுக்கியது.மெல்ல கற்போர் மீதுசிறப்பு கவனம்இந்த முறை கடந்தாண்டு அக்., முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, பாடவாரியாக தேர்வு, மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வுகளில் மதிப்பெண் குறைந்த மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ், சமூக அறிவியல் தவிர்த்த மற்ற மூன்று பாடங்களின் தேர்ச்சி சதவீதம் முக்கியம் என்பதால், அப்பாட ஆசிரியர்களுக்கு மெல்ல கற்கும் மாணவர் தேர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த ஆய்வுக்கூட்டங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிகபட்சமாக, 30, 235 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர். கடந்தாண்டை விட, நடப்பாண்டு, 45 மாணவ, மாணவியரே கூடுதலாக தேர்வெழுத உள்ளனர். 21வது இடத்தில் இருக்கும் திருப்பூர், குறைந்தது, பத்து இடங்களுக்குள் வந்து இழந்த இடத்தை மீட்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
தேர்ச்சி சதவீதம் சிறக்கும்: சி.இ.ஓ., நம்பிக்கை
பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியர், பாடஆசிரியர்கள் முழுமையாக தயார்படுத்தியுள்ளனர். மெல்ல கற்கும் மாணவர்கள், தேர்ச்சியை பெறுவதற்கு தேவையான பாடங்களை முழுமையாக படிக்க, திரும்ப, திரும்ப எழுதி பார்க்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு ஒரு தேர்வுக்கும் மற்றொரு தேர்வுக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பதால், அந்நாட்களில் மாணவர்கள் படித்ததை திரும்ப திரும்ப படிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் நிச்சயம் நல்ல மதிப்பெண்களை பெற்றுத்தருவர்; தேர்ச்சி சதவீதம் நன்றாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.- உதயகுமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்.