உடுமலை:தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணியும் தீவிரமடைந்துள்ளது. நீர் பற்றாக்குறை மற்றும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், வீணாக உள்ள விவசாயநிலங்களில் பசுமை உருவாக்கும் வகையிலும், மரச்சாகுபடி திட்டமாகவும், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில், மைவாடி, மனோண்மணிக்கு சொந்தமான நிலத்தில், 225 மகாகனி மரக்கன்றுகளும், 75 தேக்கு என, 300 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அதே போல், லிங்கமநாயக்கன்புதுார், சித்ரா கிரிராஜூக்கு சொந்தமான நிலத்தில், வரப்பு ஒரங்களில், காற்று தடுப்பானாகவும், வருவாய் கொடுக்கும் வகையிலும், 50 சவுக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.அதேபோல், அமராவதி நகர், சைனிக் பள்ளி பகுதியில், சொர்க்கம்,தான்றி, நாவல், பூவரசு, ஆயன், வாகை, மந்தாரை, இலுப்பை, தான்றி என மண்ணின் மரபு சார்ந்த மரக்கன்றுகளும், பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரினங்களுக்கு பயன் அளிக்கும் வகையிலும், 300 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், பள்ளி, கல்லுாரி, கோவில் வளாகங்கள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்கள், தொழில் நிறுவன வளாகங்களில் இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது. மரக்கன்றுகள் நட்டு, முறையாக பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.