உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்டுக்கு 10ம் ஆண்டு மூடு விழா

பஸ் ஸ்டாண்டுக்கு 10ம் ஆண்டு மூடு விழா

பல்லடம்;காரணம்பேட்டை பஸ் ஸ்டாண்ட், 10வது ஆண்டாக மூடு விழா காணும் நிலையில், ஆட்சி மாறியும் காட்சிகள் இன்னும் மாறாமல் உள்ளன. பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சி, காரணம்பேட்டை சுற்று வட்டார பகுதியில், விசைத்தறி, கல்குவாரி மற்றும் கிரஷர் தொழில்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் தொழிலாளர்கள், பொதுமக்கள் திருப்பூர், கோவை, பல்லடம் பகுதிகளுக்கு அன்றாடம் வேலைக்குச் சென்று வருகின்றனர். பல்லடம்- மற்றும் கோவைக்கு மத்தியில் அமைந்துள்ளதாலும், சுற்று வட்டார கிராம மக்கள் வேலைக்கு செல்ல வசதியாக இருக்க வேண்டி, காரணம்பேட்டை பகுதி யில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. கடந்த, 2015ம் ஆண்டு, 1.78 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, அப்போதைய முதல்வர் ஜெ., காணொலி காட்சியில் பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார். அதன்பின், பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால், பஸ் ஸ்டாண்ட் பயன்பாடின்றி கைவிடப்பட்டது. கொரோனா காலகட்டத்தில், காய்கறி சந்தையாக பஸ் ஸ்டாண்ட் பயன்பட்டது. கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும், பஸ் ஸ்டாண்ட் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. பயன்பாடற்ற பஸ் ஸ்டாண்டை ஆட்டுச் சந்தை உள்ளிட்ட ஏதாவது ஒரு மாற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இரண்டு ஆட்சிக் காலத்திலும் நடவடிக்கை எடுக்காததால், 10வது ஆண்டாக பஸ் ஸ்டாண்ட் மூடுவிழா காண்கிறது. இது குறித்து சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது: மக்களின் வரிப்பணத்தில், மக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட், 10 ஆண்டாக மூடப்பட்டு கிடப்பது வேதனையாக உள்ளது. எத்தனையோ திட்டங்களுக்கு மக்கள் காத்துக் கிடக்க, 2 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் இவ்வாறு வீணடிக்கப்பட்டு கிடக்கிறது. இதனை, மாற்றுப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பலமுறை வலியுறுத்தியும், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் மவுனமாகவே உள்ளனர். கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் உதயமாகி, பல கலெக்டர்கள் வந்து சென்றும், பஸ் ஸ்டாண்டுக்கு தீர்வு கிடைக்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவி, இருக்கைகள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. மேற்கூரைகள் உடைந்து காற்றில் தொங்கிக் கொண்டுள்ளன. கட்டடங்கள் சிறிது சிறிதாக சேதம் அடைந்து வருகின்றன. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் மது அருந்தும் கூடமாக, பயன்பட்டு வருகிறது. தொழில்துறையினர், விவசாயிகள், பொதுமக்களுடன் ஆலோசித்து, பஸ் ஸ்டாண்டை வேறு ஏதாவது ஒரு மாற்றுப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gajageswari
செப் 14, 2025 05:51

இந்த இடத்தில் எந்த பேருந்தும் புறப்படுவது இல்லை, பின்பு எதற்கு பேருந்து நிலையம். பேருந்து நிறுத்தம் போதும், பேருந்து நிறுத்தத்தில் நல்ல அத்தியாவசிய வசதிகள் செய்து நன்றாக பராமரித்தால் போதும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை