அரசு மருத்துவக் கல்லுாரியில் 24 மணி நேர பாதுகாப்பு குழு
திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 24 மணி நேர பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. புகார்கள் தொடர்பாக இக்குழுவினரிடம் எந்நேரமும் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர், செவிலியர், பணியாளர் மற்றும் நோயாளிகள் பார்வையில் தெரியும் படி ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.அதில்,' மருத்துவக் கல்லுாரி டீன் முருகேசனை தலைவராக கொண்டு மருத்துவமனை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.துணைத்தலைவராக டாக்டர் உமாசங்கர், கன்வீனர் கோபாலகிருஷ்ணன். உறுப்பினர்களாக சரவணன், சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது மொபைல் எண்கள் அறிவிப்பு பலகையில் இடம் பெற்றுள்ளது.'மருத்துவமனை வன்முறை தடுப்புக்குழு பின்வரும் உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது; மருத்துவமனை வளாகம், சுற்றியுள்ள பகுதியில் பாதுகாப்பு தொடர்பான ஏதேனும் புகார்கள் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால், உறுப்பினர்களைக் கொண்ட மருத்துவமனை பாதுகாப்புக் குழுவினரிடம் எந்நேரமும் தெரிவிக்கலாம். இக்குழு, 24 மணி நேரமும் செயல்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்லுாரியில் வன்முறை தடுப்பு குழு டாக்டர்கள் அகிலா, மோகனசுந்தரி, உமா மகேஷ்வரி, யுகனேஸ்வரன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது மொபைல் போன் எண்களும் அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.