முதல்வர் மருத்துவ காப்பீடு 5.96 லட்சம் பேர் பதிவு
தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பலர் பயன் பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த, 12 ஆண்டுகளில், 168.21 கோடி ரூபாய் மருத்துவ சிகிச்சைக்கு, முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் வாயிலாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.ஐந்து லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறக்கூடிய வகையிலான தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், ஐந்து லட்சத்து, 96 ஆயிரத்து, 330 பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த, 2012 நவ., முதல் 2024 நவ., வரையிலான, 12 ஆண்டுகளில், 168 கோடியே, 21 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்களில், 84 ஆயிரத்து, 417 பேர் திட்டம் மூலம் பயன் பெற்று, அறுவை சிகிச்சை செய்து, உயிர் பிழைத்துள்ளனர்.மாவட்டத்தில், 83க்கும் அதிகமாக தனியார் மருத்துவமனைகள் தமிழக அரசின் காப்பீடு திட்ட அட்டை ஏற்றுக்கொண்டு, குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சைகளை அளிக்கிறது. சாதாரண காய்ச்சல் துவங்கி, இருதயef சார்ந்த சிகிச்சை வரை விதிகளுக்கு உட்பட்டு, அறுவை சிகிச்சைக்கான தொகை மட்டும் காப்பீடு திட்டத்தில் மூலம் மருத்துவமனைகளுக்கு வழங்க ஒப்புதல் தரப்படுகிறது. ஆனால், அதற்கேற்ற முழுமையான ஆவணங்களை குடும்பத்தினர்,மருத்துவமனை நிர்வாகம் வசம் ஒப்படைக்க வேண்டும். முன்கூட்டியே தமிழக அரசின் முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் சிகிச்சை மேற்கொள்ள உள்ள தகவலை தெரிவிக்க வேண்டும்.
காப்பீடு அட்டை வாங்குங்க...
பெரும்பாலானோர் மருத்துவ காப்பீடு அட்டையை முன்கூட்டியே பெற்று வைத்துக் கொள்வதில்லை. குடும்ப உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதியாகும் போது அல்லது அவசர சிகிச்சைக்கு செல்லும் போதே புதிய அட்டை வாங்குவது, வி.ஏ.ஓ., தேடிச் சென்று கையெழுத்து பெறுவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.மாவட்ட கலெக்டர் அலுவலகம், மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகம், இணையதளம் வாயிலாக காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்கான பல்வேறு வழிமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்வது நல்லது; அவசர நேரத்தில் நிச்சயம் உதவும்- அரசு மருத்துவமனை டாக்டர்கள்