மங்களமாக ஒலித்த... நாதஸ்வரம் நம்ம ஊரு திருவிழாவில் செம கலக்கல்
நம்ம ஊர் திருவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பல்வேறு கலைஞர்களுக்கான நேர்காணல், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நேற்று நடைபெற்றது.தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில், கோவை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், நம்ம ஊரு திருவிழா நடக்க உள்ளது. விழாவில் பங்கேற்க ஏதுவாக, கலைக்குழுக்கள் தேர்வு செய்ய, மாவட்டம் தோறும் நேர்காணல் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்ட அளவிலான நேர்காணல், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நேற்று நடந்தது. முதல் நாளான நேற்று, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பம்பை இசை, கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடுப்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு ஆகிய கலைக்குழுவினருக்கு நேற்று நேர்காணல் நடந்தது.நியமிக்கப்பட்ட தேர்வு குழுவினர், கலைக்குழுவின் திறமைகளை ஆய்வு செய்தனர். மொத்தம், 11 குழுக்களை சேர்ந்த, 102 பேர் நேற்றைய நேர்காணலில் பங்கேற்றனர். இரண்டாம் நாளான இன்று, தெருக்கூத்து, இசைநாடகம் உள்ளிட்ட கலைகளுக்கான நேர்காணல் நடக்க உள்ளது.தேர்வு செய்யப்படும் குழுவினர், எட்டு மாவட்டங்களில் நடக்க உள்ள 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். அந்நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்பவர்கள், 2026ல் சென்னையில் நடக்கும் சென்னை சங்கமம் விழாவில் பங்கேற்க உள்ளனர். மேலும் விவரங்களுக்கு, 95664 73769 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.