உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிவு பஞ்சு மில்லில் பயங்கர தீ சிலிண்டரும் வெடித்து சிதறியது

கழிவு பஞ்சு மில்லில் பயங்கர தீ சிலிண்டரும் வெடித்து சிதறியது

பல்லடம்:பல்லடம் அருகே, கழிவுபஞ்சு அரவை மில் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிலிண்டரும் வெடித்ததால், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கரைப்புதுார் கிராமத்தில், கணபதி ராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில், கழிவுபஞ்சு அரவை மில் இயங்கி வருகிறது. நேற்று காலை, இந்த மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி, கிடங்கு முழுதும் கொழுந்துவிட்டு எரிந்தது. மூன்று தீயணைப்பு வாகனங்கள், இரண்டு மணி நேரத்துக்கு மேல் போராடியும், தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதற்கிடையே, மில் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த, வணிகப் பயன்பாட்டிலான காஸ் சிலிண்டர் ஒன்று, அதிக சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.அதில், மேற்கூரைகளும் உடைந்து சேதமாகின. இதில், தீ விபத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். மூன்று மணி நேரத்துக்கு மேல் போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கழிவுப்பஞ்சு கிடங்கை ஒட்டிய சாய ஆலை நிறுவனத்திலும், தீ பரவிய நிலையில், அதுவும் அணைக்கப்பட்டது.நேற்று, மே தினம் என்பதால் தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை