உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களால் நிம்மதி பெருமூச்சு! அமராவதி விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேற்றம்

அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களால் நிம்மதி பெருமூச்சு! அமராவதி விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேற்றம்

உடுமலை: அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் நெல் அறுவடையை தொடர்ந்து, மடத்துக்குளம், கல்லாபுரம், ருத்ராபாளையம் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில், பணிகள் தீவிரமடைந்துள்ளன. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, பழைய ஆயக்கட்டு, கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த ஜூன் 7ம் தேதி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு, நாற்றங்கால் முறை, பாய் நாற்றங்கால் முறைகளில், நெல் நடவு செய்தனர். தற்போது, இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஏக்கருக்கு அதிகபட்சமாக, 2.5 டன் மகசூல் கிடைத்து வந்த நிலையில், நடப்பாண்டு, குறுவை பருவத்தில் சாகுபடி செய்த நெல் மகசூல் அதிகரித்துள்ளது. சராசரியாக, 3 டன் வரை மகசூல் கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயிகள் விலை சரிவால் பாதிப்பதை தடுக்கும் வகையில், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகம் மற்றும் கல்லாபுரம், ருத்திராபாளையம் பகுதிகளில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த மாதம் துவக்கப்பட்டன. இங்கு, சன்ன ரக நெல், குவிண்டால், ரூ. 2,545க்கும், பொது ரக நெல், குவிண்டால், 2,500க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில், மடத்துக்குளம் கொள்முதல் மையத்தில், 400 டன் நெல்லும், கல்லாபுரத்தில், 250 டன் மற்றும் ருத்திராபாளையத்தில், 150 டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 800 டன் கொள்முதல் அதிகாரிகள் கூறியதாவது : விவசாயிகள் பயன்பெறும் வகையில், அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் மூன்று இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு, கொள்முதல் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில், 800 டன் வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அறுவடை செய்த நெல்லை, இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்வதோடு, கொள்முதல் செய்த, 24 மணி நேரத்திற்குள் விவசாயிகளின் வங்கிக்கணக்கில், நெல்லுக்குரிய தொகை செலுத்தப்படுகிறது. தற்போது, வெளி மார்க்கெட்டில், நெல் விலை குறைவாக உள்ளதால், அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்ய, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அறுவடை செய்த நெல்லை, ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்திலுள்ள உலர் களங்கள் மற்றும் கொள்முதல் மையங்களில் காய வைத்து விற்பனை செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கணியூர், கடத்துார் பகுதிகளில், அறுவடை முன்னதாகவே துவங்கியதால், மடத்துக்குளத்தில் கொள்முதல் அதிகரித்துள்ளது. கல்லாபுரம், ருத்திராபாளையம் பகுதிகளில் தற்போது அறுவடை துவங்கியுள்ளதால், அம்மையங்களிலும் கொள்முதல் தீவிமடைந்துள்ளது. அறுவடை முடியும் வரை கொள்முதல் மையங்கள் செயல்படும். கொள்முதல் செய்யப்படும் நெல், அவ்வப்போது உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று, நெல் அரவை மில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விவசாயிகள் சிட்டா, அடங்கல் ஆகிய நகல்களுடன் வந்து, பதிவு செய்து, அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி