உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிரடி பேட்டிங், அனல் பறந்த பந்துவீச்சு; வெற்றிக்கு கைகொடுத்த வீரர்கள்

அதிரடி பேட்டிங், அனல் பறந்த பந்துவீச்சு; வெற்றிக்கு கைகொடுத்த வீரர்கள்

திருப்பூர்; நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று, சி.ஆர்., கார்மென்ட்ஸ், குவாலியன்ஸ், சிவ ஜோதி ஸ்பின்னிங் மில் அணிகள் வெற்றியை வசமாக்கின. திருப்பூர் பின்னலாடை நிறுவன அணிகளுக்கு இடையிலான 'நிப்ட்-டீ பிரீமியர் லீக்' கிரிக்கெட்போட்டி, கடந்த மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. அப்துல் கலாம் சுழற்கோப்பைக்கான இந்த போட்டியை, நிப்ட் - டீ கல்லுாரியுடன், தினமலர் நாளிதழ் மற்றும் டெக்னோ ஸ்போர்ட் இணைந்து நடத்துகின்றன. முதலாவதாக 15 ஓவர் கொண்ட லீக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. மொத்தம் 20 பின்னலாடை நிறுவன அணிகள், களத்தில் விளையாடிவருகின்றன. நேற்றைய நான்கு போட்டிகளில், எட்டு அணிகள் மோதின. முதல் போட்டியில், குவாலியன்ஸ் இன்டர்நேஷனல் - காஸ்மோ டெக்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குவாலியன்ஸ், 5 விக்கெட் இழப்புக்கு, 167 ரன் எடுத்தது; ஆகாஷ், 23 பந்தில், 44 ரன் எடுத்தார். அடுத்ததாக பேட்டிங் செய்த காஸ்மோ, 8 விக்கெட் இழப்புக்கு 91 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. மூன்று ஓவர் பந்துவீசி, 21 ரன் கொடுத்து, மூன்று விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு கைகொடுத்த குவாலியன்ஸ் அணியின் பந்துவீச்சாளளர் விஜய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்; பேட்டிங்கிலும் இவர், 25 பந்தில் 28 ரன் எடுத்தார். இரண்டாவது போட்டியில், சாஹி எக்ஸ்போர்ட்ஸ் - சி.ஆர்., கார்மென்ட்ஸ் (டைகர்ஸ்) அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சாஹி, 7 விக்கெட் இழப்புக்கு 73 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய சி.ஆர்., கார்மென்ட்ஸ், 8 விக்கெட்களை இழந்து 76 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. பேட்டிங்கில் 29 பந்துக்கு 28 ரன் எடுத்து; பவுலிங்கில், மூன்று ஓவர் பந்து வீசி, 2 விக்கெட்களை வீழ்த்தியது என சி.ஆர்., கார்மென்ட்ஸ் வீரர் சதீஷ், ஆட்டநாயகன் விருது பெற்றார். மற்றொரு போட்டியில், யுனிசோர்ஸ் டிரென்ட் இந்தியா - ஸ்ரீ சிவ ஜோதி ஸ்பின்னிங் மில்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய யுனிசோர்ஸ், 8 விக்கெட் இழப்பில் 100 ரன் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த சிவ ஜோதி ஸ்பின்னிங் மில்ஸ், 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்து வெற்றிபெற்றது. 23 பந்துக்கு 47 ரன் எடுத்து பேட்டிங்கில் அதிரடி காட்டிய சிவஜோதி வீரர் சக்திவேல், ஆட்டநாயகனாக தேர்வாகினார். நான்காவது போட்டியில், சி.ஆர்., கார்மென்ட்ஸ் (ஈகிள்), ராம்ராஜ் காட்டன் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள், 6 விக்கெட் இழப்பில் 132 ரன் குவித்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த ராம்ராஜ், 57 ரன்னில் ஆட்டமிழந்தது. 11 பந்துக்கு 20 ரன் எடுத்த சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள் அணி வீரர் முகமது இத்ரிஸ், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ