| ADDED : நவ 20, 2025 05:31 AM
உடுமலை: வெள்ளியம்பாளையம் இணைப்பு ரோட்டில், பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சி பெதப்பம்பட்டியில் இருந்து வெள்ளியம்பாளையம் செல்லும் இணைப்பு ரோட்டில், அதிகளவு வாகனங்கள் செல்கின்றன. கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, திருப்பூர் ரோட்டுக்கு செல்லும் கனரக வாகனங்களும் இவ்வழித்தடத்தை பயன்படுத்துகின்றன. இந்த ரோடு நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல், குண்டும், குழியுமாக பரிதாப நிலையில் உள்ளது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன், ரோட்டிலுள்ள சிறு பாலம், கனரக வாகனம் சென்றதில், சேதமடைந்து அவ்விடத்தில் மெகா பள்ளம் ஏற்பட்டது. அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. விளைநிலங்களுக்கு இடுபொருட்களை எடுத்து செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல், விவசாயிகள் பாதித்து வருகின்றனர். தொடர் பிரச்னைகள் ஏற்பட்டும், குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தினரும், சோமவாரப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், வேதனைக்குள்ளான விவசாயிகள், இரவு நேரங்களில் அவ்வழியாக வாகனங்கள் சென்று விபத்து ஏற்படுவதை தடுக்க, தகவல் பலகை வைத்துள்ளனர்.