திருப்பூர்: ''திருப்பூர் மாவட்டம் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் மேலும் சிறக்க வேண்டும்'' என்ற கருத்தை கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாசார நிறுவனத்தின்(கிட்கோ) நான்காம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்ற தொழில் முன்னோடிகள் வலியுறுத்தினர். 'கிட்கோ' முப்பெரும் விழா, திருப்பூர், தாராபுரம் ரோடு, வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் கண்காட்சியுடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, 'கிட்கோ' நான்காம் ஆண்டு துவக்க விழா நடந்தது. குமரகுரு இன்ஸ்டிடியூஷன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். 'கிட்கோ' இயக்குனர் பாலசுப்பிரமணியம், மாநாட்டு குழு தலைவர் வசந்தகுமார், செயலாளர் பாலுசாமி, பொருளாளர் ரமேஷ்குமார், துணை தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.ஜி.பி., குழுமங்கள் தலைவர் பழனி பெரியசாமி, ரூட்ஸ் குழுமங்கள் தலைவர் ராமசாமி, பெஸ்ட் கார்ப்ரேஷன் துணை தலைவர் ராஜ்குமார் ராமசாமி, ஸ்கை குழுமங்களின் தலைவர் சுந்தரராஜ், 'மெஜஸ்டிக் எக்ஸ்போர்ட் தலைவர் கந்தசாமி ஆகிய தொழில் முன்னோடிகள் சிறப்புரையாற்றினார். தொழில்மேம்பாடு குறித்து தொழில்வல்லுனர்களும் பேசினர். தொழில்நுட்ப ஜவுளியில்கவனம் செலுத்துங்கள் இதில் பங்கேற்றோரின் உரை: கோவை ரூட்ஸ் குழுமங்கள் தலைவர் ராமசாமி: தொழில்களில் வாய்ப்புகள் மட்டுமல்ல; சவால்களும் ஏராளமாக இருக்கும். சவால்களை சந்தித்து வெற்றிபெற வேண்டும். நுகர்வோருடன் நேரடி தொடர்புள்ள பின்னலாடைத் தொழில் தொடர்ந்து வளர்ச்சி பெறும். எதிர்காலத்தில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி முக்கியத்துவம் பெறும். பின்னலாடைத்துறையினர், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிக மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தியால் வர்த்தகம் வளம் பெறும். செய்யும் தொழிலே தெய்வம்; அதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 'கொங்கு வங்கி' சேவைதுவங்க வேண்டும் பி.ஜி.பி., குழுமங்களின் தலைவர் பழனி பெரியசாமி: இந்தியாவில், 80 சத வீத விவசாயிகள் தொழில்நுட்பத்தை பின்பற்றுவதில்லை. தொழிலை வளர்த்ததுபோல், நமது பாரம்பரிய விவசாய தொழிலை மேம்படுத்த 'கிட்கோ' அமைப்பு ஆவன செய்ய வேண்டும். கல்வி, மருத்துவம், தொழில்களில் கொங்கு மண்டலம் சிறப்பாக இயங்கி வருகிறது; இருப்பினும், வங்கி தொழிலில் நாம் கவனம் செலுத்தவில்லை. சில சமுதாயத்தினர், பிரத்யேக வங்கி துவக்கி, தொழில் முனைவோருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதேபோல், 'கொங்கு வங்கி' என்ற பெயரில் சேவை துவக்கினால், தொழில்முனைவோருக்கு சரியான வாய்ப்புகளை வழங்க முடியும்; பிரத்யேக வங்கி சேவையை துவக்க திட்டமிட வேண்டும். சில மாதங்களில், அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும். புவியின் உயிர்த்தன்மைமேம்படுத்துவது அவசியம் 'ஸ்கை' குழுமங்களின் தலைவர் சுந்தரராஜ்: விவசாயத்தில் இருந்து மாறி தொழில், கல்வி, மருத்துவத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அமெரிக்க வரிவிதிப்பு, கோவை, திருப்பூருக்கு சவாலாக மாறியுள்ளது; விரைவில், இதிலிருந்து மீண்டு வருவோம். வளர்ச்சி என்பது வளம் குன்றாத வளர்ச்சியாக இருக்க வேண்டும். பூமி வளம் குன்றி வருகிறது; இயற்கை வேளாண்மையில் இருந்து விலகி, நவீன வேளாண்மைக்கு மாறியதால், பூமியின் உயிர்த்தன்மை, 5 சதவீதத்தில் இருந்து, 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. உணவு உற்பத்தி அதிகம் தேவை; ஆனால், உற்பத்தி குறைந்து வருகிறது. முதன்மை தொழிலாகிய விவசாயத்தையும், இயற்கையையும், கலாசாரத்தையும் மீட்டுருவாக்கம் செய்வது, தமிழகத்துக்கு மிக அவசியம். பூமியின் உயிர்த்தன்மையை மேம்படுத்த வேண்டும். கொட்டிக்கிடக்கும்வர்த்தக வாய்ப்புகள் 'பெஸ்ட் கார்ப்பரேஷன்' துணை தலைவர் ராஜ்குமார் ராமசாமி: பின்னலாடை தொழில் சிரமமாக இருக்கிறது என்று கூறினால் யாரும் நம்ப வேண்டாம்; சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. திருப்பூர், 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறது; உள்நாட்டு உற்பத்தி, 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடக்கிறது. சீன ஆடை (160 பில்லியன் டாலர்) ஏற்றுமதி 12 லட்சம் கோடி ரூபாய்க்கு நடக்கிறது. வங்கதேசம், ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கும், வியட்நாம், நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும் ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவின் ஆடை ஏற்றுமதி, 1.30 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருக்கிறது; போட்டியை நுாதனமாக சமாளித்தால், ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க வரி உயர்வால் சிறிய மந்தநிலை நிலவுகிறது; விரைவில் இந்நிலை மாறும். கொங்கு மண்டலம்அபார வளர்ச்சி 'மெஜஸ்டிக்' எக்ஸ்போர்ட்ஸ் தலைவர் கந்தசாமி: கொங்கு மண்டலத்தின் பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன், எதிர்கால சந்ததிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொங்கு மண்டலம், இரண்டு தலைமுறைகளாக, அபார வளர்ச்சி பெற்றிருக்கிறது. கடும் உழைப்பால் தொழில் வளர்ந்துள்ளது. தொழில் பாதுகாப்பு, தரமான கல்வி, தொழில் வளம், உடல்நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத் தில் எத்தகைய சவால்களாக இருந்தாலும், வெற்றிகரமாக சமாளிக்கும் அளவுக்கு, திறன் மிகுந்த இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். 'மெஜஸ்டிக்' எக்ஸ்போர்ட் தலைவர் கந்தசாமிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட, பல்வேறு குழுவினருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நவீன் பிரபஞ்ச நடனக்குழுவின் வள்ளி கும்மியும், ஊஞ்சப்பாளையம் காவடிக்குழுவின், காவடி ஆட்ட நிகழ்ச்சியும் நடந்ததது. இன்று, கொங்கு வர்த்தக கூட்டமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா நடக்கிறது. குமரகுரு இன்ஸ்டிடியூஷன் தலைவர் கிருஷ்ணராஜ்வாணவராயர் பேசியதாவது: இந்தியாவுக்கு, மிகப்பெரிய எதிர்காலம் உண்டு; உலகமே பார்த்து வியக்கும் வண்ணம் நாம் வளர்ந்திருக்கிறோம். நமக்கு இயற்கை வளம், மனிதவளம், கலாச்சார வளம் மேலோங்கி இருக்கிறது; எவ்வித குறையும் இல்லை. இந்தியா வளர்ந்த தேசமாக வேண்டுமென கலாம் கனவு கண்டார்; இன்று, அதையும் கடந்து, உலக வல்லரசுகளில் ஒன்றாக மாறும் வாய்ப்பு நெருங்கிவிட்டது; அதில், கொங்கு மண்டலத்தின் அர்ப்பணிப்பு மிக அதிகம். உழைப்பால் முன்னேறிய திருப்பூர், பல்வேறு மாவட்ட மக்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. எந்நிறுவனமும் ஒரே நாளில் வளர்ச்சி பெறுவதில்லை; போராடித்தான் வளர்ந்துள்ளனர். சவால்களை கடந்துதான் வெற்றி பெற்றிருக்கின்றனர்; சரித்திரத்திலும் இடம்பெறுகின்றனர். சுவாமி விவேகானந்தர் கூறியபடி, உங்களால் முடியாதது எதுவுமில்லை; முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை; இது சத்தியம். இருப்பினும், தொழிலில் ஏற்ற, இறக்கம் இருக்கலாம். வெற்றியில் இறுமாப்பு இருக்கக்கூடாது; தோல்வியில் துவண்டுவிடக்கூடாது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா வந்து, 'டேரிப்'பை ரத்து செய்யும் நாள் உறுதியாக வரும். இந்தியாவை விலக்கி வைத்துவிட்டு, உலகில் எந்த நாடுகளும் தொழில் செய்ய முடியாது. ஒவ்வொரு இந்தியனும், நாட்டை முதலில் நினைத்துப்பார்க்க வேண்டும். கலாசாரத்தில், இந்தியாவுக்கு இணையான தேசம் எதுவும் இல்லை. இவ்வாறு, அவர் பேசினார்.