மேலும் செய்திகள்
பழனிசாமி 12ம் தேதி வருகை; மக்களை திரட்ட ஆலோசனை
08-Sep-2025
திருப்பூர்; திருப்பூர் வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, 12ம் தேதி, திருப்பூரில் அனைத்து தொழில்துறையினரையும் சந்திக்கிறார். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், அனைத்து மாவட்டங்களுக்கும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் படி, வரும், 11ம் தேதி காங்கயம் தொகுதியில் பேசுகிறார். அன்று இரவு, திருப்பூர், அனுப்பர்பாளையத்திலுள்ள பார்ச்சூன் ஓட்டலில் தங்குகிறார். 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு, அனைத்து தொழில் அமைப்பினர், வர்த்தகர்களை சந்தித்து, கலந்துரையாடுகிறார். தொழில் சார்ந்த கோரிக்கையை கேட்டு, மாலையில் நடக்கும் பிரசாரத்தில், முக்கிய தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக, கட்சியினர் கூறுகின்றனர். இது குறித்து, அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது: 'மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்' என்ற கோஷத்துடன், பொதுச்செயலாளர் பழனிசாமி, வரும், 11ம் தேதி காங்கயம் தொகுதிக்கு வருகிறார். வரும், 12ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, திருப்பூர் வடக்கு தொகுதியில், பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியிலும், அதனை தொடர்ந்து, தெற்கு தொகுதியில், மாநகராட்சி அலுவலகம் அருகிலும், மக்களிடையே பேசுகிறார். முன்னதாக, அனைத்து தொழில் அமைப்பினரையும், 15 வேலம்பாளையம் ரோட்டில் உள்ள பார்ச்சூன் ஓட்டலில், 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு சந்திக்கிறார். அனைத்து பனியன் தொழில் அமைப்பினர், வர்த்தக கூட்டமைப்பினர், விவசாய சங்க பிரதிநிதிகள், கைத்தறி, விசைத்தறி மற்றும் பாத்திர தொழில் அமைப்பினர் மற்றும் சங்க நிர்வாகிகளை சந்தித்து, கலந்துரையாடுகிறார். அதன்படி, ஒவ்வொரு அமைப்பினரும், தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி, கலந்துரையாடல் கூட்டத்தின் வாயிலாக, தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என, அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
08-Sep-2025