அமராவதி சர்க்கரை ஆலை புதுப்பிக்கப்படும்! 3 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
உடுமலை: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும், என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான நிலையில், அதனை ஏற்று, உடுலையில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ''வல்லுனர் குழு அமைத்து விரைவில் புதுப்பிக்கப்படும்'' என முதல்வர் அறிவித்தது, மூன்று மாவட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில், 1960ம் ஆண்டு முதல் கூட்டுறவு நிறுவனமாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை துவக்கப்பட்டது. இதில், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 18,500 கரும்பு விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். துணை நிறுவனமாக, 1994ம் ஆண்டு எரிசாராய ஆலையும் உள்ளது. பழமையான ஆலை என்பதால், இயந்திரங்கள் பழுதாகி, 20 ஆண்டுக்களுக்கும் மேலாக, ஆலை, அரவை மற்றும் சர்க்கரை உற்பத்தி படிப்படியாக குறைந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இதனால், விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள், வெட்டாட்கள் உட்பட மறைமுக வேலைவாய்ப்பு பெறுவோர் பாதித்து வருவதாக, நேற்றைய 'தினமலர்' நாளிதழி ல், உடுமலை சப்ளிமென்ட்டில் செய்தி வெளியானது. நேற்று, உடுமலையில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் துவக்க விழா நடந்தது. இதில் பேசிய முதல்வர் '' அமராவதி சர்க்கரை ஆலை செயல்படாமல் இருப்பதை விவசாயிகள் சுட்டிக்காட்டிய நிலையில், சர்க்கரை ஆலையை புதுப்பிக்க, ஆராய்ந்து பரிந்துரை வழங்க வல்லுனர் குழு அமைத்து, விரைவில் சர்க்கரை ஆலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். 'தினமலர்' செய்தியை உற்று நோக்கி, அதில் விவசாயிகள் தெரிவித்திருந்த கருத்துக்களை ஏற்று, முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, மூன்று மாவட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.